ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடருக்கு இலங்கையில் தடை! | Sri Lanka stops Johnson and Johnson Baby Powder

வெளியிடப்பட்ட நேரம்: 21:25 (31/01/2019)

கடைசி தொடர்பு:21:25 (31/01/2019)

ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடருக்கு இலங்கையில் தடை!

ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடரில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய `ஆஸ்பெஸ்டாஸ்’ என்ற கனிமப் பொருள் கலந்திருப்பதால் பேபி பவுடரை இறக்குமதி செய்ய இலங்கை அரசு தடைவிதித்துள்ளது. இலங்கை அரசின் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் ஓர் அங்கமான தேசிய மருத்துவ ஒழுங்குமுறை ஆணையம் (NMRA) இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஆஸ்பெஸ்டாஸ் கனிமப்பொருள் கலக்கப்படவில்லை என்று தரச் சான்றிதழ் தரப்படும் வரை இந்தத் தடை நீடிக்கும் என்று கூறப்படுகிறது. 

ஜான்சன்

கடந்த மாதத்தில், இதே `ஆஸ்பெஸ்டாஸ்' கனிமச் சேர்க்கைக்காக இந்தியாவிலும் இரண்டு உற்பத்திக்கூடங்களில் குழந்தைகளுக்கான பவுடர் தயாரிப்பை நிறுத்துமாறு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இந்தியா மட்டுமல்லாது இங்கிலாந்து, அமெரிக்கா எனப் பல்வேறு நாடுகளிலும் இந்த நிறுவனத்தின் பேபி பவுடர் மீது புகார்கள் எழுந்துள்ளன. 

அமெரிக்காவில் உள்ள மிசௌரி மாகாணத்தைச் சேர்ந்த ஜாக்குலின் ஃபாக்ஸ் என்பவர், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான பவுடரையும் ஷவர் டு ஷவர் பவுடரையும் 35 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்ததால் கருப்பை புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி இறந்ததாக அவரின் உறவினர்கள் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜாக்குலின் குடும்பத்தாருக்கு, 72 மில்லியன் அமெரிக்க டாலர் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டனர். அதேபோல, அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த ஈவா எக்கேவார்ரியா என்ற பெண்மணி, கருப்பை புற்றுநோய் தாக்குதலுக்கு உள்ளானார். அதற்கும் அவர் பயன்படுத்தி வந்த ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடர்தான் காரணமென்று வழக்கு தொடர்ந்ததில், அப்பெண்ணுக்கு 417 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜான்சன்

இத்தனை சர்ச்சைகளுக்கிடையே தற்போது இலங்கையிலும் ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடருக்கு தடைவிதிப்பட்டுள்ள செய்தி, நுகர்வோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.