பிள்ளையார் சிலைகளைக் கரைக்க செயற்கைக் குளங்கள்! - யமுனை நதி கண்காணிப்புக் குழு பரிந்துரை | NGT committee proposes artificial ponds and pits for reducing post-immersion pollution in Yamuna River

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (31/01/2019)

கடைசி தொடர்பு:22:30 (31/01/2019)

பிள்ளையார் சிலைகளைக் கரைக்க செயற்கைக் குளங்கள்! - யமுனை நதி கண்காணிப்புக் குழு பரிந்துரை

பிள்ளையார் சிலை

பிள்ளையார் சதுர்த்தி, துர்கா பூஜை போன்ற விழாக்காலங்களில் பிள்ளையார் சிலைகளைக் கரைப்பதற்கென்றே தனியாகச் செயற்கை குளங்கள் மற்றும் நீர் நிறைந்த குழிகள் அமைக்கப்பட வேண்டும் என யமுனை நதி மாசுபாட்டுக் கண்காணிப்புக் குழு (Yamuna Pollution Monitoring Committee) தேசிய பசுமைத் தீர்ப்பாயத்துக்குப் பரிந்துரைத்துள்ளது.

யமுனை ஆற்றின் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கும் கண்காணிப்பதற்கும் அமைக்கப்பட்ட இந்தக் குழு தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளைச் செய்து வருகிறது. அதன்படி டிசம்பர், 2018-ல் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சிலைகளின் உயரம் அதிகபட்சம் மூன்று அடி வரை மட்டுமே இருக்க வேண்டும் எனக் கட்டுப்பாடு விதித்தது. அதே போன்று டெல்லிப் பகுதி ஆணையரும் சிலைகளை ஆற்றில் கரைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என முன்மொழிந்தார்.குஜராத்தின் சூரத் நகரில் உள்ள தபி (Tapi) ஆற்றில் பிள்ளையார் சிலைகளைக் கரைப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக 22 செயற்கை குளங்கள் சிலைகளைக் கரைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த வருடப் பிள்ளையார் சதுர்த்தியின்போது 6,000 பிள்ளையார் சிலைகள் இந்தக் குளங்களில் கரைக்கப்பட்டன. இதைப் பார்த்த அதிகாரிகள் டெல்லியிலும் இவற்றைச் செயல்படுத்த வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளனர். கடந்த வருடப் பிள்ளையார் சதுர்த்திக்குப் பிறகு, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் யமுனை ஆற்றில் ஆய்வு செய்தபோது அதிர்ச்சிகரமான முடிவுகள் கிடைத்தன. சிலைகளில் உள்ள ரசாயனப் பொருள்களான குரோமியம், நிக்கல், மெர்க்குரி போன்றவை ஆற்றுநீரில் அதிகம் கலந்து குளிப்பதற்குக்கூட தகுதியில்லாத நீராக மாறியுள்ளது. 

செயற்கை குளங்கள் யோசனை மாற்றாக இருந்தாலும் அவற்றில் நிரப்பப்படும் நீர் பற்றியும் அதன்பின் மாசடையும் நீரும் என்ன செய்யப்படும் என்பது பற்றியும் குறித்த தெளிவான முடிவுகள் இல்லை. அதையும் கருத்தில் கொள்வது அவசியம்.