`பாக்ஸ் காலியா இருக்கு சார்’- அமேசானிடமிருந்து 30 லட்ச ரூபாயைச் சுருட்டிய நபர்! | Man Arrested For Cheating Amazon in Indore

வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (01/02/2019)

கடைசி தொடர்பு:00:00 (01/02/2019)

`பாக்ஸ் காலியா இருக்கு சார்’- அமேசானிடமிருந்து 30 லட்ச ரூபாயைச் சுருட்டிய நபர்!

அமேசான்

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுள் ஒன்றான அமேசான் நிறுவனத்தை ஏமாற்றியதாக இந்தூரைச் சேர்ந்த முகமது மஹ்வாலா என்பவரைக் கைது செய்திருக்கிறார்கள் காவல்துறையினர். இது தொடர்பாக அமேசான் நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஏமாற்று நடவடிக்கையில் முகமது மஹ்வாலா மட்டுமின்றி வேறு சிலரும் கூட்டாகச் சேர்ந்து செயல்பட்டிருக்கிறார்கள். இவர்கள் இதுவரை சுமார் 30 லட்சம் ரூபாய் வரைக்கும் பணத்தை சுருட்டியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்காகப் பல போலியான இ - மெயில் ஐடிகள் மற்றும் தொலைபேசி எண்கள் ஆகியவற்றை அவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள். முதலில் அதிக மதிப்பு கொண்ட பொருள்களை அமேசான் இணையதளத்தில் இவர்கள் ஆர்டர் செய்திருக்கிறார்கள். பின்னர் ஆர்டர் செய்த பொருள் டெலிவரி செய்யப்பட்ட பின்னர் அமேசானைத் தொடர்பு கொண்டு பார்சலில் வந்த பாக்ஸில் பொருள் எதுவும் இல்லை எனப் பொய் புகார் அளிப்பார்கள்.

அமேசான்

அதை உண்மை என நம்பும் அமேசான் நிறுவனம் அதற்கான தீர்வாக பொருளுக்கான பணத்தை அவர்களது கணக்கில் செலுத்தும். ஆனால் உண்மையில் பார்சலில் வந்த பொருள்களை இவர்கள் வெளியே எடுத்து உள்ளூர் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்திருக்கிறார்கள். இப்படி 50-க்கும் மேற்பட்ட பொருள்களை ஆர்டர் செய்த இந்தக் கும்பல் கிட்டத்தட்ட 30 லட்சம் ரூபாயை அமேசானிடம் இருந்து திரும்பப் பெற்றிருக்கிறார்கள். அதுவும் ஒரே ஒரு வங்கிக் கணக்கில் அந்தப் பணம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

தொடர்ந்து நடந்த இந்த நடவடிக்கையால் சந்தேகம் அடைந்த அமேசான் நிறுவனம் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளது. மத்திய பிரதேச மாநில சைபர் கிரைம் பிரிவு எஸ்பி ஜிதேந்திர சிங் இந்தத் தகவல்களை தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட முகமது மஹ்வாலாவிடம் இருந்து இரண்டு விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்கள், வயர்லெஸ் ரவுட்டர், ஸ்மார்ட் வாட்சுகள் மற்றும் கிரெடிட் கார்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த கும்பலைச் சேர்ந்த மற்ற நபர்களைத் தேடி வரும் காவல்துறையினர் அமேசானின் உள்ளூர் சேமிப்பு கிடங்கில் பணி புரிபவர்களுக்கும் இந்த நடவடிக்கைகளில் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கிறார்கள். எனவே அது தொடர்பாக விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
 


[X] Close

[X] Close