``நடிகர் மோகன்லாலிடம் பேசிவருகிறோம்” -பா.ஜ.க எம்.எல்.ஏ தகவல் | We are talking to actor mohanlal regarding upcoming election, says BJP MLA

வெளியிடப்பட்ட நேரம்: 10:44 (01/02/2019)

கடைசி தொடர்பு:10:44 (01/02/2019)

``நடிகர் மோகன்லாலிடம் பேசிவருகிறோம்” -பா.ஜ.க எம்.எல்.ஏ தகவல்

ரும் நாடாளுமன்றத் தேர்தலில் நடிகர் மோகன்லாலை போட்டியிடவைக்க முயல்வதாகவும், அதுகுறித்து அவரிடம் பேசிவருவதாகவும் கேரள பா.ஜ.க. எம்.எல்.ஏ., ஓ.ராஜகோபால் தெரிவித்துள்ளார்.

மோகன்லால்

நாடாளுமன்றத் தேர்தல் வியூகம் வகுக்கும் பணியில் கேரள அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. கூட்டணி, தொகுதிப் பங்கீடு, எந்தத் தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பதுபோன்ற ஆலோசனைகள் தீவிரமாக நடந்துவருகின்றன. சபரிமலை போராட்டம் காரணமாக பா.ஜ.க செல்வாக்கு அதிகரித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளைப் போன்று பா.ஜ.க-வும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இந்த நிலையில், கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில், விஐபி வேட்பாளரைக் களம் இறக்க பா.ஜ.க முயன்றுவருகிறது.

சசிதரூர்

திருவனந்தபுரம் தொகுதியில் இப்போது, காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் எம்.பி-யாக உள்ளார். மீண்டும் அவர் போட்டியிட்டால், அவருக்கு எதிராக வலுவான ஒரு வேட்பாளரைக் களம் இறக்க வேண்டும் என்பதால், விஐபி வேட்பாளரைக் களம் இறக்குவதில் பா.ஜ.க உறுதியாக உள்ளது. அதன் ஒருபகுதியாக, தற்போதைய நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினர், நடிகர் சுரேஷ்கோபி, முன்னாள் டிஜிபி சென்குமார், பா.ஜ.க மாநிலத் தலைவர் ஸ்ரீதரன்பிள்ளை, மிசோரம் மாநில ஆளுநராக இருக்கும் கும்மனம் ராஜசேகரன் ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன. மேலும், மலையாள சினிமா சூப்பர் ஸ்டார் மோகன்லாலை திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடவைக்க பா.ஜ.க முயன்றுவருகிறது. தேர்தலில் போட்டியிடுவதுகுறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என மோகன்லால் கூறிவருகிறார்.

ஓ.ராஜகோபால்

ஆனால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோகன்லாலை பா.ஜ.க சார்பில் வேட்பாளராக நிறுத்த முயல்வதாகவும், அதற்காக அவரிடம் நேரில் பேசிவருவதாகவும் கேரள பா.ஜ.க-வின் ஒரே எம்.எல்.ஏ-வான ஓ.ராஜகோபால் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு, மோகன்லாலுக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மோகன்லால் அரசியல் பிரவேசம்குறித்த செய்திதான் மலையாள ஊடகங்களில் முக்கியச் செய்தியாக வலம்வருகிறது.