வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்வு!- சம்பளதாரர்கள் மகிழ்ச்சி | Budget 2019 - Income Tax slab increased!

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (01/02/2019)

கடைசி தொடர்பு:15:00 (01/02/2019)

வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்வு!- சம்பளதாரர்கள் மகிழ்ச்சி

இன்றைய இடைக்கால பட்ஜெட் உரையில், தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பை 2.5 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தி, நிதிப்பொறுப்பைக் கவனிக்கும் அமைச்சர் பியூஸ் கோயல் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் சம்பளதாரர்களிடையே இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வருமான வரி

கடந்த 2014ம் ஆண்டில் பா.ஜ.க. அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் தாக்கல் செய்த 2014-15ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டில், தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பை 2 லட்சத்திலிருந்து 2.5 லட்சமாக உயர்த்தி அருண்ஜெட்லி அறிவித்தார். அதன்பிறகு தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக தாக்கல் செய்யப்பட்ட பொது பட்ஜெட்டில் இந்த உச்சவரம்பில் மாற்றம் கொண்டுவரப்படவில்லை. இடையே பண மதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவரப்பட்டு மக்கள் பெருத்த மன உளைச்சலுக்கு ஆளான சூழலிலும்கூட இந்த வருமான வரி விலக்கு வரம்பை மத்திய அரசு உயர்த்தவில்லை. 

எனினும், சமீபத்தில் நடைபெற்ற 3 மாநில சட்டசபைத் தேர்தல்களில் ஆளும் பா.ஜ.க. அரசு, ஆட்சியைப் பறிகொடுத்த சூழலில், வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர்களைக் கவரும்விதமாக வருமான வரி உச்சவரம்பு மாற்றப்படலாம் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. தற்போது எதிர்பார்த்தபடியே உயர்த்தப்பட்டதால் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் சம்பளதாரர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள். இந்த அறிவிப்பின்மூலம் சுமார் 3 கோடி பேர் பயனடைவார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.