`அரசை ஏமாற்றியவர்கள் யாரும் உலகின் எந்த மூலையிலும் ஒளிய முடியாது!’ - அருண் ஜெட்லி | No one who cheats INDIA - Arun Jaitely

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (01/02/2019)

கடைசி தொடர்பு:19:00 (01/02/2019)

`அரசை ஏமாற்றியவர்கள் யாரும் உலகின் எந்த மூலையிலும் ஒளிய முடியாது!’ - அருண் ஜெட்லி

அருண் ஜெட்லி

மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் 2019-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளார். நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அந்தப் பொறுப்பு பியூஷ் கோயலிடம் ஒப்படைக்கப்பட்டது.  

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஜெட்லி, ``பியூஷ் கோயல் ஒரு சிறந்த பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளார். இடைக்கால பட்ஜெட்டானது பா.ஜ.க அரசு, கடந்த 5 ஆண்டுகளில் பா.ஜ.க அரசு செய்ததை ஆய்வு செய்யும் விதத்திலும், நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு முன்கூட்டியே பல விஷயங்களை ஆய்வு செய்து தயாரிக்கப்பட்டுள்ளது. சிறந்த பட்ஜெட்டை வழங்கிய பியூஷ் கோயலுக்கு எனது பாராட்டுக்கள். இந்தப் பட்ஜெட்டானது நடுத்தர மக்களுக்கு உதவுவதாக அமைந்துள்ளது. 2014 - 2019-ம் ஆண்டு வரை தாக்கல் செய்துள்ள பட்ஜெட் நடுத்தர வர்க்கத்தினருக்குப் பல்வேறு நிவாரணங்களை வழங்கியுள்ளது.

இந்த அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது. இந்த அரசு வந்த பிறகு வரி விலக்கு வரம்பு  2 லட்சத்தில் இருந்து 2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. அதன் பிறகு 3 லட்சமாக இது நீடிக்கப்பட்டது. சம்பளதாரர்களுக்குக் கடந்தாண்டு பட்ஜெட்டில் 40,000 வரிவிலக்கு அளிக்கப்பட்டது. அது இந்தாண்டு 50,000- ஆக உயர்த்தப்பட்டுள்ளது’ என பட்ஜெட் குறித்து பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்ட அவர், `நாட்டின் பிரதமர் நேர்மையாக இருந்தால், தனது ஆட்சியில் நேர்மையான கலாசாரத்தை அறிமுகப்படுத்தினால், ஒருவரும் இந்தியாவில் மோசடி செய்துவிட்டுத் தப்பி ஓடமாட்டார்கள். பாதுகாப்புத் துறை தளவாடங்களை வாங்க ஒவ்வொரு முறையும் தரகர் தேவைப்படுவது ஏன்?’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.  

அருண் ஜெட்லி ட்விட்டர் பதிவு

மேலும் அவர் கூறுகையில், ``இந்தியாவில் இருந்து தப்பி உலகத்தின் எந்த மூலையில் போய் ஓடி ஒளிய முடியாது. உலக நாடுகளுடனான  இந்தியாவின் உறவு மற்றும் சர்வதேச அளவிலான விதிமுறைகள் ஆகியவற்றால் அவர்களைத் திரும்ப இந்தியா கொண்டுவருவோம்’’ என்று பதிவிட்டிருக்கிறார். பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகுதான் விஜய் மல்லையா, நிரவ் மோடி போன்ற தொழிலதிபர்கள் கடன் மோசடி செய்து நாட்டைவிட்டு தப்பி ஓடினர் என்பது குறிப்பிடத்தக்கது.