அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் `திவால்!’ - வங்கிகளின் 46,000 கோடி திரும்புமா? | RCom Goes For Insolvency

வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (02/02/2019)

கடைசி தொடர்பு:12:10 (02/02/2019)

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் `திவால்!’ - வங்கிகளின் 46,000 கோடி திரும்புமா?

ஜியோ வருகையால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுள் ஒன்றான அனில் அம்பானியின் ஆர் கம்யூனிகேசன் நிறுவனம் திவால் ஆனதாக அறிவிக்கும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இந்த நிறுவனம் ரூ.46,000 கோடி அளவுக்குக் கடன் வைத்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு முதல் சொத்துகளை விற்று கடனை அடைக்க ஆர். கம்யூனிகேசன்ஸ் நிறுவனம் முடிவு செய்தது. ஆனால், சொத்துகளை விற்க முடியவில்லை. 

அனில் அம்பானி

தொடர்ந்து நேற்று நிறுவனத்தின் இயக்குநர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ரிலையன்ஸ கம்யூனிகேசன்ஸ் நிறுவனத்தைத் திவால் ஆனதாக அறிவிக்கக் கோரி மும்பையில் உள்ள தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தை அணுக முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 270 நாள்களுக்குக் கடன் அடைக்கப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. 

கடந்த செப்டம்பர் மாதத்தில் ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனம் தன் சேவையை முற்றிலும் நிறுத்திக்கொண்டது. ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் கவனம் செலுத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிறுவனத்துக்கு 40 வங்கிகள், நிறுவனங்களிடத்தில் கடன் உள்ளன. ரூ. 25,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை விற்க முயன்றும் பல்வேறு காரணங்களால் விற்க முடியவில்லை. 

சுவீடனைச் சேர்ந்த எரிக்ஸன் நிறுவனம் மும்பையில் உள்ள தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்திடம் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு எதிராக முதல் வழக்கை தொடர்ந்தது. இந்த நிறுவனத்துக்கு ஆர். கம்யூனிகேசன் நிறுவனம் ரூ.975 கோடி பாக்கி வைத்துள்ளது. 

இந்த நிறுவனத்துக்கு எஸ்.பி.ஐ, யூனியன் வங்கி, கனரா வங்கி, ஐ.டி.பி.ஐ, ஸ்டேன்டர்ட் சார்ட்டர்ட், ஹெச். எஸ்.பி.ஐ வங்கிகள் மற்றும் சீன மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை கடன் கொடுத்துள்ளன. 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க