”மக்களை ஏமாற்ற முடியாது; படுதோல்விதான்”! - மத்திய பட்ஜெட் குறித்து நாராயணசாமி காட்டம் | Puducherry CM Narayanasamy slams BJP government over Budget 2019

வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (02/02/2019)

கடைசி தொடர்பு:17:10 (02/02/2019)

”மக்களை ஏமாற்ற முடியாது; படுதோல்விதான்”! - மத்திய பட்ஜெட் குறித்து நாராயணசாமி காட்டம்

”மக்களை ஏமாற்ற முடியாது. பா.ஜ.க-வுக்கு படுதோல்வி நிச்சயம்” என்று மத்திய பட்ஜெட் குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

நாராயணசாமி

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, ''இடைக்கால பட்ஜெட் என்பதை ஆட்சி முடியும் காலம் வரை மட்டுமே தாக்கல்செய்யப்பட வேண்டும். ஆனால், மத்தியில் நேற்று தாக்கல்செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட், 2030 வரை 11 ஆண்டுகளுக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், முழுக்க முழுக்க விதிமுறைகள் மீறப்பட்டிருக்கின்றன. மேலும், அதில் திட்டங்கள் பற்றி மட்டும்தான் குறிப்பிடப்பட்டிருக்கிறதே தவிர, திட்டத்திற்கான நிதி ஆதாரத்தைப் பெருக்குவதற்கான எந்த ஒரு அம்சமும் அந்த பட்ஜெட்டில் இல்லை.

பட்ஜெட்

பட்ஜெட் மூலம் மக்களை என்னதான் திசைதிருப்ப நினைத்தாலும், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க படுதோல்வியைச் சந்திக்கும். விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்பது தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு அவர்கள் வாக்குகளை வாங்குவதற்காகக் கொடுக்கப்படும் தொகை. இது ஒன்றும் புதிய திட்டம் அல்ல. புதுச்சேரியில், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 8 ஆயிரம் ரூபாய்  வழங்கப்பட்டுவரும் திட்டம் ஏற்கெனவே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. மேலும், பல்வேறு மாநிலங்களிலும் இந்தத் திட்டம் நடைமுறையில் இருக்கிறது. ஆனால், மோடி அரசு அதைப் புதிய திட்டம் என்று வீண் தம்பட்டம் அடித்துக்கொள்கிறது.

மோடி

மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில், ஆயிரக்கணக்கில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். அப்போது அங்கு சென்று, சம்பந்தப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்காமல்,  தமிழக விவசாயிகள் டெல்லி சென்று போராடியபோதெல்லாம் வராத கரிசனம், பிரதமர் மோடிக்கு இப்போது வந்தது ஏன்? உண்மையிலேயே விவசாயிகளுக்கு நன்மையை ஏற்படுத்தும் விவசாய கடன்களைத் தள்ளுபடிசெய்ய பிரதமர் தயாரா?

கிரண் பேடி

ஆளுநர் கிரண் பேடி, தான் ஆய்வுக்கு செல்லும் இடங்களில் எல்லாம், பலவித கேமராக்களை எடுத்துக்கொண்டு திரைப்பட நடிகர் போன்று நடித்து, ஆளுநர் பதவியை அசிங்கப்படுத்துகிறார். எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் அவர் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை. அதனால், நானும் என்னை மாற்றிக்கொள்ள மாட்டேன். கிரண் பேடியின் ஆட்டம் இன்னும் மூன்றே மாதத்தில் முடிவுக்கு  வந்துவிடும்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க