வினையாகிப்போன பேச்சு; டெல்லியில் முகாமிட்ட கோஷ்டிகள் -திருநாவுக்கரசர் நீக்க பின்னணி! | Why Thirunavukkarasar expelled from Tamil Nadu Congress President

வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (03/02/2019)

கடைசி தொடர்பு:09:53 (08/02/2019)

வினையாகிப்போன பேச்சு; டெல்லியில் முகாமிட்ட கோஷ்டிகள் -திருநாவுக்கரசர் நீக்க பின்னணி!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த திருநாவுக்கரசர் திடிரென நேற்று இரவு நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக கே.எஸ். அழகிரி புதிய காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கபட்டுள்ளார்.

அழகிரி

நாடாளுமன்ற தேர்தல்வரை தமிழக காங்கிரஸ் தலைமையில் மாற்றம் இருக்காது என, காங்கிரஸாரே உறுதியாக நம்பியிருந்த சூழலில் தான், அதிரடியாக மாற்றம் அரங்கேறியுள்ளது. திருநாவுக்கரசரை பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாகவே இருந்து வருகிறது. இது தொடர்பாக, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், பீட்டர் அல்போன்ஸ், வசந்தகுமார், உள்ளிட்டோர் டெல்லி சென்று புகார் பட்டியலை ராகுலிடம் கொடுத்திருந்தனர். `நாடாளுமன்ற தேர்தல்வரை மாற்றம் வேண்டாம். அது தேர்தலை பாதிக்க வாய்ப்புள்ளது'  என்றபடி நடவடிக்கையை கட்சி மேலிடம் தள்ளிப்போட்டது. இப்படிப்பட்ட சூழலில் தான் திருநாவுக்கரசரின் சமீபத்திய பேச்சு, எதிர்கோஷ்டிக்கு கடும் எரிச்சலை கிளப்பியது.

ராகுல்

டெல்லி பொறுப்பாளர்கள் முகுல் வாஸ்னிக், சஞ்சய்தத், ஆகியோர் முன்னிலையில், திருநாவுக்கரசர், ``நாடாளுமன்ற தேர்தல் முடியும்வரை நான் தான் தலைவர். தமிழக காங்கிரஸ் தலைமை மாற்றத்துக்கு வாய்ப்பில்லை'' என்று உறுதியாக பேசியிருந்தார். அவரது பேச்சை மூத்த தலைவர்களும் விரும்பவில்லை என்கின்றனர் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள், ``நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே தலைமையில் மாற்றம் ஏற்பட்டால், தேர்தல் பணிகள் பாதிக்கும் , ஆகவே தன்னை மாற்றுவதற்கு வாய்ப்பில்லை என உறுதியாக நம்பினார் திருநாவுக்கரசர். இதனால் தேர்தலுக்கான ஆயத்தபணிகளில் இறங்கிய அவர், லோக்சபா தேர்தலையொட்டி தேர்தல் பணிகுழு, பிரசார குழு உள்ளிட்ட குழுக்களை அமைக்க  திட்டமிட்டிருந்தார்.

காங்கிரஸ்

இந்த குழுக்களில் பீட்டர் அல்போன்ஸ், கராத்தை தியாகராஜன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டவர்களின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் கடுப்பான எதிர்கோஷ்டியைச் சேர்ந்த ஸ்ரீவல்லபிரசாத், பீட்டர் அல்போன்ஸ், ப.சிதம்பரம், சஞ்சய்தத் ஆகியோர் டெல்லி சென்று ராகுலிடம், திருநாவுக்கரசின் செயல்பாடுகள் மீதான தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி, மாற்றத்தை வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து சீரடி சென்று திரும்பிய திருநாவுக்கரசருக்கு, டெல்லி வருமாறு கட்சி தலைமை உத்தரவிட்டது.

டெல்லியில் நேற்று நடந்த கூட்டத்தில், பெரும்பாலானோர் திருநாவுக்கரசர் மீது அதிருப்தி தெரிவிக்கவே நீக்கம் உறுதியானது. தான் நினைத்ததற்கு மாறான முடிவு எடுக்கப்பட்டுள்ளதால் அப்செட்டில் இருக்கும் திருநாவுக்கரசர் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டவாய்ப்பில்லை'' என்கின்றனர். `தேசிய அளவில் பல முக்கிய பொறுப்புகளில் இருந்து வருவதால் மாநிலத் தலைவர் பதவி வேண்டாம். தனக்கு அதில் விருப்பமில்லை' என்று கூறி தனக்கு வந்த பொறுப்பை, தன் ஆதரவாளர் கே.எஸ். அழகிரிக்கு பரிந்துரைத்துள்ளார் ப.சிதம்பரம். அதன்படி தலைவராகியுள்ள கே.எஸ். அழகிரி தி.மு.கவுக்கு மிகவும் நெருங்கமானவர். கடலூரைச் சேரந்த இவர் மீது கருணாநிதிக்கு தனி பாசம் இருந்தது குறிப்பிடத்தக்கது.