`மம்தா ஜி, இது ஜனநாயக விரோதம்!’ - தொலைபேசி வாயிலாக பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய யோகி ஆதித்யநாத் | UP CM in Lucknow addressed a rally in Balurghat via telephone

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (03/02/2019)

கடைசி தொடர்பு:07:25 (04/02/2019)

`மம்தா ஜி, இது ஜனநாயக விரோதம்!’ - தொலைபேசி வாயிலாக பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய யோகி ஆதித்யநாத்

மேற்குவங்கத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, அம்மாநிலத்தில் நடைபெற்ற பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொலைபேசி வாயிலாக உரையாடினார். 

யோகி ஆதித்யநாத்

Photo Credit: ANI

மேற்குவங்க மாநிலத்தின் பலூர்காட் மற்றும் ராய்கஞ்ச் ஆகிய பகுதிகளில் பா.ஜ.க சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டங்களில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக தெற்கு தினஞ்பூர் மாவட்டத்தில் உள்ள பலூர்காட் பகுதியில் யோகி ஆதித்யநாத் பயணிக்கும் ஹெலிகாப்டர் தரையிறங்க பா.ஜ.க சார்பில் உள்ளூர் நிர்வாகத்திடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால், யோகி ஆதித்யநாத்தின் ஹெலிகாப்டர் தரையிறங்க  உள்ளூர் நிர்வாகம் முன்னறிவிப்பின்றி அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. 

இதனால், பலூர்கட் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் யோகி ஆதித்யநாத்தால் கலந்துகொள்ள இயலவில்லை. இது ஜனநாயகப் படுகொலை என மம்தா பானர்ஜி அரசு மீது மேற்குவங்க பா.ஜ.க-வினர் குற்றம்சாட்டினர். இந்த நிலையில், பலூர்கட் பொதுக்கூட்டத்தில் லக்னோவில் இருந்தபடியே யோகி ஆதித்யநாத், தொலைபேசி வழியாக உரையாற்றினார். 

அவர் பேசுகையில், ``ஜனநாயகத்தில், அதிகாரத்தை ஒருவர் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதை ஒப்புக் கொள்ளுங்கள் மம்தா  ஜி. மேற்குவங்க அரசு செயல்படும் விதம் அனைத்து வகையிலும் ஏற்புடையதாக இல்லை. அதேபோல், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களும் ஜனநாயக முறையில் செயல்படவில்லை’’என்றார். 

யோகி ஆதித்யநாத்

Photo Credit: ANI

இதுகுறித்து லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய யோகி ஆதித்யநாத், ``ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள் (Save Democracy) என்ற தலைப்பில் பா.ஜ.க முன்னெடுத்த முழக்கத்தை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தொடக்கம் முதலே எதிர்த்து வந்தார். அதைத் தொடங்கிவைக்க மேற்குவங்க மாநிலம் செல்ல இருந்த பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷாவை மேற்குவங்க அரசு தடுத்தது. பலூர்கட் மற்றும் ராய்கஞ்ச் ஆகிய பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டங்களில் நான் கலந்துகொள்ளத் திட்டமிட்டிருந்தேன். ஆனால், ஹெலிகாப்டர் தரையிறங்க  அவர்கள் அனுமதிக்கவில்லை. இந்தக் காரணத்தால்தான் நான் தொலைபேசி வாயிலாக பொதுக்கூட்டத்தில் உரையாற்றினேன்’’என்றார்.