`ஆவணங்கள் இல்லாமல் வந்தார்களா?’ - சி.பி.ஐ அதிகாரிகளைக் கைது செய்த கொல்கத்தா போலீஸ் | CBI Stopped by kolkata police

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (03/02/2019)

கடைசி தொடர்பு:07:51 (04/02/2019)

`ஆவணங்கள் இல்லாமல் வந்தார்களா?’ - சி.பி.ஐ அதிகாரிகளைக் கைது செய்த கொல்கத்தா போலீஸ்

மேற்கு வங்க மாநிலத்தில் நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணைக்கு வந்த சி.பி.ஐ அதிகாரிகள் கொல்கத்தா மாநகர கமிஷனரிடம் விசாரணை நடத்த முயன்றனர். ஆனால், இதற்கு மேற்கு வங்க அரசு எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், சி.பி.ஐ அதிகாரிகளைக் காவல்துறையினர் கைது செய்தது பரபரப்பாகியுள்ளது.

மம்தா

மேற்கு வங்கத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த சாரதா நிதி நிறுவனம் முதலீட்டாளர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கை அமலாக்கத்துறை, சி.பி.ஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சாரதா நிதி நிறுவனத் தலைவர் சுதிப்தா சென் கைது செய்யப்பட்டுள்ளார். சி.பி.ஐ விசாரணையில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு இதில் தொடர்பு இருக்கலாம். எனவே, அவரை கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ தரப்பு முடிவு செய்ததாக தெரிகிறது. இந்த வழக்கு தொடர்பாக சில ஆவணங்கள் விட்டுப்போனதாகவும் அதுகுறித்து கேட்டதற்கு எந்தத் தகவலும் இல்லை என்பதே சி.பி.ஐ வாதமாக இருக்கிறது.

அதிகாரிகள்

இந்த வழக்கை ராஜீவ் குமார் தலைமையிலான விசாரணை அதிகாரிகள் விசாரித்து வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக விடுபட்ட ஆவணங்களை அவர்களிடம் கேட்டதாகவும் மேற்கொண்டு சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், ராஜீவ் குமாரிடம் விசாரணை மேற்கொள்ள அவரது இல்லத்துக்கு சி.பி.ஐ அதிகாரிகள் இன்று மாலை சென்றனர். ஆனால், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் ஆணையர் வீடு அமைந்திருந்த பகுதிக்கு வந்த போலீஸார் சி.பி.ஐ அதிகாரிகளை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். 

போலீஸ்

பா.ஜ.கவுக்கும் மம்தாவுக்கும் இடையேயான அரசியல் மோதல்கள் உச்சகட்டத்தில் இருக்கிறது. அமித் ஷா, ஸ்மிரிதி இராணி, யோகி ஆதித்யநாத் ஆகியோர் பிரசாரத்துக்கு வருவதை நிறுத்தும் நோக்கில் அவர்களது ஹெலிகாப்டர்கள் தரையிறங்க மாவட்ட நிர்வாகம் மூலம் தடை போட்டு வருகிறார் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. ஏற்கெனவே மாநில அரசின் அனுமதி இல்லாமல் சி.பி.ஐ உள்ளே வரக்கூடாது என எச்சரித்திருந்தார் மம்தா. இந்த பரப்பான அரசியல் கட்டத்தில் சி.பி.ஐ அதிகாரிகளை காவல்துறையினர் தடுத்தனர்.

மம்தா

இந்நிலையில் கொல்கத்தா ஆணையர் வீட்டுக்கு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி விரைந்தார். முதலமைச்சர் வருகையை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கொல்கத்தா டி.ஜி.பி, மேயர்  ஆகியோருடன் மம்தா அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, ``மாநிலத்தில் குழப்பத்தை ஏற்படுத்த மோடியும், அமித் ஷாவும் ஈடுபடுவதாகவும். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை’’ என்று பேசினார். இதையடுத்து தற்போது தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில், சி.பி.ஐ அதிகாரிகளை மாநில காவல்துறையினர் தடுத்து நிறுத்தியது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் முறையிட சி.பி.ஐ முடிவு செய்துள்ளது.

அதேபோல், சட்டம் ஒழுங்கைக் காக்கக் கோரி மம்தா உள்ளிட்டோர் கொல்கத்தாவில் தர்ணாவில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்தத் தர்ணாப் போராட்டத்தில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கொல்கத்தாவின் ஷேக்ஸ்பியர்  சரணி காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சி.பி.ஐ அதிகாரிகள் 5 பேர் விடுவிக்கப்பட்டனர். இந்த விவகாரம் மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

இந்த விவகாரம் குறித்து பேசிய கொல்கத்தா நகர இணை ஆணையர் (குற்றப்பிரிவு) பிரவீன் திரிபாதி, ``எந்தவித ஆவணங்களும் இன்றி சி.பி.ஐ அதிகாரிகள் வந்திருக்கிறார்கள். கேட்டால், ரகசிய ஆபரேஷன் என்கிறார்கள். என்ன ஆபரேஷன் என்ற கேள்விக்கு அவர்களிடமிருந்து திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை’’ என்றார். 

இதுகுறித்து பேசிய சி.பி.ஐ இடைக்காலத் தலைவர் நாகேஸ்வர ராவ், ``சாரதா சிட்பண்ட் மோசடி குறித்து உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி விசாரணை நடத்தி வருகிறோம். உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முன்பாக ராஜீவ் குமார் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை மேற்கு வங்க அரசு நியமித்திருக்கிறது. அவர்தான், தற்போது கொல்கத்தா காவல் ஆணையராகப் பதவி வகித்து வருகிறார். 
அவருக்கு எதிரான ஆவணங்கள் இருந்தன. ஆனால், அவற்றை கொல்கத்தா போலீஸார் கைப்பற்றிவிட்டனர். எங்களுக்கு எந்தவிதமான ஒத்துழைப்பையும் அவர்கள் வழங்கவில்லை. பெரும்பாலான ஆவணங்கள் அழிக்கப்பட்டு விட்டன அல்லது மாயமாகிவிட்டன’’ என்று கூறியிருக்கிறார்.