`யூ ஆர் கிரேட் மேன்' - ராணுவ வீரருக்கு உதவிய கம்பீரை கொண்டாடும் நெட்டிசன்கள்! | Gautam Gambhir shares pic of Army veteran begging, def min assures quick action

வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (04/02/2019)

கடைசி தொடர்பு:08:52 (04/02/2019)

`யூ ஆர் கிரேட் மேன்' - ராணுவ வீரருக்கு உதவிய கம்பீரை கொண்டாடும் நெட்டிசன்கள்!

விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பணம் இல்லாமல் தவித்து வந்த முன்னாள் ராணுவ வீரருக்கு கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் உதவி செய்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கெளதம் கம்பீர்

டெல்லியில் கன்னாட் பகுதியில், அரசு அலுவலகம் ஒன்றின் வளாகத்தில் விபத்தால் பாதிக்கப்பட்ட பீதாம்பரன் என்ற முன்னாள் ராணுவ வீரர் கையில் பதாகையுடன்  உதவிக் கேட்டு வந்துள்ளார். அதில்,  ``1965 மற்றும் 1971 காலகட்டத்தில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் போரில் பங்கேற்றுள்ளேன். சமீபத்தில் ஒரு விபத்தில் சிக்கினேன். மருத்துவச் செலவுக்குப் பணம் இல்லை. உங்கள் உதவி தேவை” என்று எழுதப்பட்டிருந்தது. இந்தப் புகைப்படத்தை  இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் ட்விட்டரில் ராணுவ வீரரின் நிலையைக் குறிப்பிட்டிருந்தார். கூடவே, ராணுவ அமைச்சகத்தையும், ராணுவ செய்தி தொடர்பாளரையும் டேக் செய்திருந்தார். 

ராணுவ வீரர்

இந்த நிலையில், கம்பீரின் ட்வீட்டைப் பார்த்த பாதுகாப்பு அமைச்சகம் அவருக்குப் பதிலளித்தது. அதில், ``ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மீது நீங்கள் காட்டிய அக்கறை வரவேற்கக்கூடியது. நீங்கள் எழுப்பிய கவலைகள் தீர்க்கப்படும் என உறுதியளிக்கிறோம்” எனக் கூறப்பட்டிருந்தது. பாதுகாப்பு அமைச்சகத்தின் நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துள்ளார் கம்பீர். அதில், “பாதுகாப்பு அமைச்சகம் பீதாம்பரனுக்கு உதவி செய்வதாக கூறியுள்ளதற்கு நன்றி. அவரின் அறுவை சிகிச்சைக்கு ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் அமைப்பு உதவி செய்ய இருக்கிறது. உடனே பதில் அளித்ததற்கு நன்றி” எனப் பதிவிட்டார். கம்பீரின் செயலை நெட்டிசன்கள், அவரது ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க