`இரவு முழுவதும் தர்ணா; திடீர் பரபரப்பில் கொல்கத்தா' - மம்தாவுக்கு குவிந்த ஆதரவு! | West Bengal Chief Minister Mamata Banerjee's 'Save the Constitution' dharna at Metro Channel,

வெளியிடப்பட்ட நேரம்: 06:59 (04/02/2019)

கடைசி தொடர்பு:08:58 (04/02/2019)

`இரவு முழுவதும் தர்ணா; திடீர் பரபரப்பில் கொல்கத்தா' - மம்தாவுக்கு குவிந்த ஆதரவு!

கொல்கத்தா மெட்ரோ பகுதியில் தர்ணா போராட்டம் நடத்தி வரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஆதரவு குவிந்து வருகிறது. 

மம்தா

சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கை சி.பி.ஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சாரதா நிதி நிறுவனத் தலைவர் சுதிப்தா சென் கைது செய்யப்பட்டுள்ளார். சி.பி.ஐ விசாரணையில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு இதில் தொடர்பு இருக்கலாம் எனவே, அவரைக் கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ தரப்பு முடிவு செய்ததாகத் தெரிகிறது. இந்த வழக்கு தொடர்பாக சில ஆவணங்கள் விட்டுப்போனதாகவும் அதுகுறித்து கேட்டதற்கு எந்தத் தகவலும் இல்லை என்பதே சி.பி.ஐ வாதமாக இருக்கிறது. இந்த நிலையில், காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் விசாரணை மேற்கொள்ளவதற்காக அவரது இல்லத்துக்கு சி.பி.ஐ அதிகாரிகள் நேற்று மாலை சென்றனர். ஆனால், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

மம்தா

இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் உள்ள காவல்நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் ஆணையர் வீடு அமைந்திருந்த பகுதிக்கு வந்த போலீஸார் சி.பி.ஐ அதிகாரிகளைக் கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதற்கிடையே, கொல்கத்தா ஆணையர் வீட்டுக்கு வந்த அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவருடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து  ``மாநிலத்தில் குழப்பத்தை ஏற்படுத்த மோடியும், அமித் ஷாவும் ஈடுபடுவதாகவும். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை’’ என்று கூறியதுடன், ``அரசியலமைப்பைக் காப்பாற்றுங்கள்'' என்ற முழக்கத்தை முன்வைத்து மத்திய அரசுக்கு எதிராகக் கொல்கத்தா மெட்ரோ பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இரவு முழுவதும் கொட்டும் பனியிலும் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். அவருடன் முக்கிய அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  மம்தாவுக்கு ஆதரவாக ராகுல் காந்தி, ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், தேவ கவுடா, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

மம்தா

ஸ்டாலின் பதிவிட்டுள்ளதில், ``பா.ஜ.க ஆட்சியில், அரசியல் சாசன அமைப்புகளின் தன்னாட்சி பறிபோகிறது. கூட்டாட்சி தத்துவம் மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக மம்தா பானர்ஜியின் பக்கம் நிற்பேன்" எனக் கூறியுள்ளார். மம்தாவுக்கு ஆதரவாகக் கொல்கத்தா முழுவதும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர் அவரின் தொண்டர்கள். இதனால் கொல்கத்தா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க