``உயர்கல்வி நிலையங்களில் தொழில்முனைவோர் மையங்கள்” - தொடங்கி வைத்த பிரதமர் மோடி | Rashtriya uchchatar shiksha abhiyan inaugurated by modi

வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (04/02/2019)

கடைசி தொடர்பு:08:00 (04/02/2019)

``உயர்கல்வி நிலையங்களில் தொழில்முனைவோர் மையங்கள்” - தொடங்கி வைத்த பிரதமர் மோடி

தொழில்முனைவோர், புதுமை தொழில் மையங்கள் திட்டத்தை டிஜிட்டல் லாஞ்ச் மூலம் தொடங்கி வைத்தார்  பிரதமர் நரேந்திர மோடி.

இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் உயர்கல்வி துறையின் வளர்ச்சிக்காக `ராஸ்ட்ரிய உச்சடார் சிக்க்ஷா அபியான்(RUSA)’ என்ற திட்டத்தின் கீழ் தொழில்முனைவோர், புதுமை தொழில் மையங்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்தோடு, நாடு முழுவதும் பயன்பெற உள்ள 70 கல்லூரிகள், 12 தொழிற் கல்லூரிகள், 66 தொழில் மையங்கள் மற்றும் 1 பெண்கள் பல்கலைக்கழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி  டிஜிட்டல் லாஞ்ச் (digital launch) மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார்.

ஸ்ரீநகர் SKICC மாநாட்டு மையத்திலிருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் பயன்பெற உள்ள அனைத்து கல்லூரிகளிலும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். கடந்த வருடம் RUSA திட்டத்துக்கு ரூ.13,000 கோடி வரை ஒதுக்கப்பட்டது. நாடு முழுவதும் கடந்த ஆண்டு இத்திட்டத்தின் கீழ் 19 புதிய பல்கலைகழகங்கள் திறக்கப்பட்டுள்ளன, மேலும், 135 பல்கலைக்கழகங்கள் மற்றும் 1982 கல்லூரிகளுக்கு தேவையான கட்டமைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த வெற்றியைத் தொடர்ந்து இந்த ஆண்டு மாணவர்கள் தொழில்முனைவோர் ஆக்கும் பொருட்டு உயர்கல்வி நிலையங்களில் தொழில்முனைவோர், புதுமை தொழில் மையங்கள் என்ற திட்டத்தை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

தமிழகத்தைச் சேர்ந்த 8 உயர்கல்வி நிலையங்கள் இதில் பயன் பெற உள்ளன. அவை சென்னை அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் கொடைக்கானல் மதர் தெரசா பெண்கள் பல்கலைக்கழகம். விழாவின் இறுதியில் மாணவர்களின் சில கேள்விகளுக்குப் பதில் அளித்தார் மோடி. தமிழக கல்லூரிகளில் நடைபெற்ற இந்நிகழ்சியில் மோடி இந்தியில் மட்டுமே பேசியதால் மாணவர்களுக்கு அவர் பேசியது புரியவில்லை. அதனால் இனி வரும் காலங்களில் இதுபோன்று அனைத்து மாநில மக்களும் கேட்கும் நேரலை நிகழ்ச்சிகள் மொழிபெயர்ப்புடன் இருந்தால் நன்றாக இருக்கும் என கருத்து தெரிவித்தனர் மாணவர்கள்.