கூடலூர் டு சென்னை... நெகிழித் தடையை வலியுறுத்தி 10,000 கி.மீ பைக்கில் நின்றபடி பயணிக்கும் பெண்! | A woman travelling on a bike for environmental protection awareness

வெளியிடப்பட்ட நேரம்: 14:16 (04/02/2019)

கடைசி தொடர்பு:14:16 (04/02/2019)

கூடலூர் டு சென்னை... நெகிழித் தடையை வலியுறுத்தி 10,000 கி.மீ பைக்கில் நின்றபடி பயணிக்கும் பெண்!

சைபி மேத்யூ

`நெகிழியை ஒழிப்போம், இயற்கையைப் பாதுகாப்போம், விவசாயத்தைக் காப்போம்' என்ற முழக்கத்தோடு இருசக்கர வாகனத்தில் நின்றபடியே விழிப்பு உணர்வு பயணத்தைத் தொடங்கியிருக்கிறார் உலக சாதனைப் பெண் சைபி மேத்யூ. தமிழகத்தின் 33 மாவட்டங்களையும் இலக்காய்க் கொண்டு நேற்று தொடங்கியிருக்கும் அவரின் பயணம் பற்றி அவரிடம் தொலைபேசியில் கேட்டோம். 

``டூ வீலரில் நின்றுகொண்டே பயணிப்பது எனக்குப் புதிதல்ல. ஏற்கெனவே கடந்த ஆண்டு ஊட்டி டு சென்னை வரை 3,000 கிலோ மீட்டர் தொலைவு நின்றபடியே பைக் ஓட்டி உலக சாதனை படைத்திருக்கிறேன். பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி அந்தப் பயணத்தைத் தொடங்கிய எனக்கு உலகம் முழுவதிலுமுள்ள பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களும் ஆதரவு அளித்தார்கள். அந்த ஊக்கம்தான் எனக்கு அடுத்த பயணத்தைத் தொடங்க வேண்டும் என்ற உந்துதலைக் கொடுத்தது. 

கூடலூர் முதல் சென்னை வரை பைக்கில் பயணிக்கும் சைபி மேத்யூ

2019 ஜனவரி 1-ம் தேதி முதல் நெகிழி பயன்பாட்டுக்குத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது தமிழக அரசு.  அது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. அந்தத் திட்டமானது வெறும் உத்தரவாக மட்டுமே இருந்துவிடக்கூடாது. மக்கள் மத்தியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே நான் இந்தப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறேன். நேற்று காலை கூடலூரில் ஆரம்பித்த எனது இந்தப் பயணத்துக்கு தமிழகம் முழுவதிலுமுள்ள இயற்கை ஆர்வலர்களும் பல்வேறு அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்ல, இந்தப் பயணம் 10,000 கிலோமீட்டர் தொலைவை இலக்காகக் கொண்டது. தமிழகத்திலுள்ள ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று அங்குள்ள சமூக ஆர்வலர்களோடு சேர்ந்து மக்களைச் சந்திக்க இருக்கிறேன். வருகிற 7-ம் தேதி சென்னையில் நிறைவுபெறும் எனது பயணத்தைப் பெரும் விழாவாக நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்” என்கிறார் பைக் ரேஸர் சைபி மேத்யூ.

சுற்றுச்சூழலுக்காக எல்லைகளைக் கடந்து நெடுந்தொலைவு பயணிக்கும் சைபி மேத்யூவின் இலக்கு வெற்றியடையட்டும்.