‘மோடி ஓய்வுபெற்றால் நான் அரசியலிலிருந்து விலகிடுவேன்’- ஸ்மிரிதி இரானி உருக்கம் | The day PM Modi hang his boots, i will quit politics says smriti irani

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (04/02/2019)

கடைசி தொடர்பு:16:40 (04/02/2019)

‘மோடி ஓய்வுபெற்றால் நான் அரசியலிலிருந்து விலகிடுவேன்’- ஸ்மிரிதி இரானி உருக்கம்

மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி நேற்று மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது பார்வையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

ஸ்மிருதி இரானி

உங்களை எப்போது பிரதமராகப் பார்க்கலாம் என்ற கேள்விக்கு, ``பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் எனக்கு இல்லை. சிறந்த தலைமையின் கீழ் பணியாற்றவேண்டும் என்றுதான் அரசியலுக்கு வந்தேன். அந்த பாக்கியம் எனக்குக் கிடைத்துள்ளது. முன்னதாக வாஜ்பாய் தலைமையின் கீழ் பணியாற்றினேன். தற்போது மோடி தலைமையின் கீழ் பணியாற்றுகிறேன். பிரதமர் மோடி எப்போது அரசியலிலிருந்து ஓய்வு பெறுகிறாரோ அப்போது நான் இந்திய அரசியலிலிருந்தே விலகி விடுவேன். அதற்காக மோடி நீண்ட நாள் அரசியலில் இருக்க மாட்டார் என்பது அர்த்தம் கிடையாது. அவர் இன்னும் பல ஆண்டுகள் தலைவராக நீடிப்பார்” எனக் கூறினார். 

மற்றொரு பார்வையாளர், `2014-ம் ஆண்டு தேர்தலைப்போல் இந்த வருடம் தேர்தலிலும் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிடுவீர்களா எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு, ``அதை என்னால் கூறமுடியாது. கட்சித் தலைமைதான் அந்த விஷயத்தை முடிவு செய்ய வேண்டும். 2014-ம் ஆண்டு அமேதி மக்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் தற்போது நான் யார் என்பதை அறிந்திருப்பார்கள்” எனக் குறிப்பிட்டார்.

மேலும், ``மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜும், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனும் இந்திய அரசியலில் மிகப்பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளனர். உண்மையில் அவர்கள்தான் எனக்குச் சிறந்த உத்வேகமாகத் திகழ்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.