`51 பேர் அல்ல; 2 பெண்கள்தான் சபரிமலையில் தரிசனம் செய்தார்கள்!’ - கேரள அமைச்சர் தகவல் | only 2 women offered prayers in Sabarimala, Minister inform Kerala assembly

வெளியிடப்பட்ட நேரம்: 18:25 (04/02/2019)

கடைசி தொடர்பு:18:25 (04/02/2019)

`51 பேர் அல்ல; 2 பெண்கள்தான் சபரிமலையில் தரிசனம் செய்தார்கள்!’ - கேரள அமைச்சர் தகவல்

சபரிமலையில் 2 பெண்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்துள்ளதாக, கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் அம்மாநில சட்டப் பேரவையில் தெரிவித்துள்ளார்.

சபரிமலை

'சபரிமலையில் 10 வயது முதல் 50 வயதுவரையுள்ள பெண்களுக்கு வழிபடும் உரிமை இருக்கிறது' என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்தத் தீர்ப்பை ஏற்க மறுத்த இந்து அமைப்புகள், 'சபரிமலைக்குப் பெண்கள் செல்வதைத் தவிர்க்க வேண்டும்' என்று கூறி பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர். அதேபோல, சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு எதிராக சரண கோஷப் போராட்டமும் நடத்தப்பட்டது. அதேநேரம், 'சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும்' என்று கேரள அரசு அறிவித்தது.

பிந்து, கனகதுர்கா

சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்த கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த பிந்து, மலப்புரத்தைச் சேர்ந்த கனக துர்கா ஆகிய இரு பெண்கள், தங்களுக்குப் பாதுகாப்பு கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டது. 

இந்த வழக்கின் வாதத்தின்போது, சபரிமலையில் 51 பெண்கள் சுவாமி தரிசனம் செய்ததாக முதலில் கேரள அரசு கூறியது. கேரள அரசு தாக்கல்செய்த பட்டியலில் இடம்பெற்றிருந்த பெயர்கள் போலியானவை என்ற சர்ச்சை எழுந்தது. 

கடகம்பள்ளி சுரேந்திரன்

இந்த நிலையில், சபரிமலையில் இதுவரை 2 பெண்கள் சுவாமி தரிசனம் செய்தது மட்டுமே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். அம்மாநில சட்டப் பேரவையில், இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், சபரிமலை செயல் அலுவலரின் அறிக்கையின்படி, கோயிலுக்குள் சென்று 2 பெண்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்துள்ளனர்’ என்றார். இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் சபரிமலையில் தரிசனம் செய்ததாக வெளியான தகவல்குறித்த கேள்விக்கு, அதுகுறித்து இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்று சுரேந்திரன் பதிலளித்தார்.