இரண்டாவது நாளாகத் தொடரும் மம்தாவின் போராட்டம்! - நேரில் ஆதரவு தெரிவித்த கனிமொழி | DMK leader Kanimozhi arrive at Kolkata Airport to meet West Bengal CM Mamata Banerjee.

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (04/02/2019)

கடைசி தொடர்பு:23:00 (04/02/2019)

இரண்டாவது நாளாகத் தொடரும் மம்தாவின் போராட்டம்! - நேரில் ஆதரவு தெரிவித்த கனிமொழி

கனிமொழி

நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், பா.ஜ.க-வுக்கு எதிராக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, புதிய கூட்டணிக்கு அஸ்திவாரம் போட்டுள்ளார். மம்தாவின் அழைப்பை ஏற்று, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் அவரது தலைமையில் நடந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினர். இந்த மாநாட்டில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொண்டார். மாநாட்டில் பேசியவர்கள், மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார்கள். 

இதையடுத்து, பா.ஜ.க தரப்பில் மேற்கு வங்கத்தில் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடுசெய்யப்பட்டது. இதில், பா.ஜ.க தலைவர் அமித் ஷா கலந்துகொண்டு உரையாற்றுவதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அவரது ஹெலிகாப்டர் தரையிறங்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்தது. இது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, ஸ்மிரிதி இரானி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யந்தாத் ஆகியோரது ஹெலிகாப்டர்களும் தரையிறங்குவதற்குக் கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. யோகி, தொலைபேசி வாயிலாக மாநாட்டில் உரையாற்றினார்.

இந்நிலையில்தான், சாரதா நிதி நிறுவனம் முறைகேடு வழக்கை விசாரித்துவந்த சிபிஐ, மேற்கு வங்க மாநிலத்தில் அதிரடியாக நுழைந்தது. கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு இந்த வழக்கில்  தொடர்பு இருக்கலாம். எனவே, அவரைக் கைதுசெய்து காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ தரப்பு முடிவுசெய்ததாகத் தெரிகிறது. இந்த வழக்கு தொடர்பாக சில ஆவணங்கள் விட்டுப்போனதாகவும், அதுகுறித்து கேட்டதற்கு எந்தத் தகவலும் இல்லை என்பதுமே சிபிஐ வாதமாக இருந்தது. ராஜீவ் குமாரிடம் விசாரணை மேற்கொள்ள, அவரது இல்லத்துக்கு சிபிஐ அதிகாரிகள் நேற்று மாலை சென்றனர். ஆனால், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், அவர்களை தடுத்துநிறுத்தி கைதுசெய்தனர். இந்த எதிர்பாராத சம்பவத்தால் மாநிலத்தில் திடீர் பரபரப்பு உருவானது. 

மம்தா பானர்ஜி

ராஜீவ் குமார் இல்லத்துக்கு மம்தா வருகைபுரிந்தார். அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டவர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். இது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனக் கூறிய மம்தா, தர்ணாவில் அமர்ந்தார். இவருக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். நேற்று இரவிலிருந்து தொடர் தர்ணாவில் ஈடுபட்டுவருகிறார். 

கனிமொழி தர்ணா

இதுதொடர்பாக  தி.மு.க மாநிலங்களை உறுப்பினர் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், ``மாநில உரிமைகளைக் காக்க, அரசியலமைப்பு சட்டத்தைப் பாதுகாக்க, மம்தா பானர்ஜி அவர்களின் போராட்டத்தை ஆதரிப்பது நம் கடமை” எனப் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், இன்று மாலை மம்தாவை சந்திப்பதற்காக தி.மு.க மாநிலங்களை உறுப்பினர் கனிமொழி கொல்கத்தா விரைந்தார். மம்தாவை சந்தித்தவர், அவருடன் தர்ணாவில் அமர்ந்து ஆதரவு தெரிவித்துள்ளார்.