`திருப்பதி கோயிலில் தங்கக் கிரீடங்கள் கொள்ளை!’ - சந்தேக நபரின் புகைப்படம் வெளியீடு | The gold crowns robbery in Tirupati temple

வெளியிடப்பட்ட நேரம்: 04:30 (05/02/2019)

கடைசி தொடர்பு:07:40 (05/02/2019)

`திருப்பதி கோயிலில் தங்கக் கிரீடங்கள் கொள்ளை!’ - சந்தேக நபரின் புகைப்படம் வெளியீடு

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில், ரூ.50 லட்சம் மதிப்பிலான தங்க கிரீடங்கள் கொள்ளைப் போன வழக்கில், சந்தேகிக்கப்படும் வாலிபரின் புகைப்படத்தை போலீஸார் வெளியிட்டுள்ளனர். அவரை, அடையாளம் கண்டு தகவல் தெரிவிப்போருக்கு உரிய சன்மானம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகப்படக்கூடிய வாலிபர்

திருப்பதி ரயில் நிலையம் அருகில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலை, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் நிர்வகிக்கிறது. கடந்த 2-ம் தேதி இரவு, மூலவர் சந்நிதிக்கு அருகில் உள்ள ஸ்ரீகல்யாண வெங்கடேஸ்வரர் சந்நிதியில் வைக்கப்பட்டிருந்த உற்சவர்களுக்கு அணிவிக்கப்படும் மூன்று தங்கக் கிரீடங்கள் திருடு போயின. கிரீடங்களின் மொத்த மதிப்பு ரூ.50 லட்சமாகும். இதுதொடர்பாக, தேவஸ்தான உயரதிகாரிகள் மற்றும் திருப்பதி எஸ்.பி அன்புராஜன் தலைமையிலான போலீஸார், அர்ச்சகர்களிடம் கிடுக்கிப்பிடியாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கோயிலுக்குள் 15 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

கொள்ளை - சந்தேகப்படக்கூடிய வாலிபர்

அதுமட்டுமின்றி, சுழற்சி முறையில் அர்ச்சகர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வளவு பாதுகாப்பையும் மீறி, கோயிலுக்குள் வந்து தங்கக் கிரீடங்களைத் துணிகரமாக கொள்ளையடித்துக் கொண்டு வெளியே செல்லும் தைரியம் யாருக்கு இருக்கிறது. கோயில் பணியாளர்கள் மூலமாகவே, இக்கொள்ளை சம்பவம் நடைபெற்றிருக்க வேண்டும் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். சிசிடிவி கேமராக்களை சோதனை செய்ததில், சந்தேகப்படக்கூடிய வகையில் வாலிபர் ஒருவர், கோயிலுக்கு வந்து செல்வது பதிவாகியிருக்கிறது. அந்த நபர் தான், கொள்ளையனாக இருக்கும் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

அந்த இளைஞனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள போலீஸார், ``அவரை அடையாளம் கண்டு தகவல் தெரிவிப்போருக்கு உரிய சன்மானம் வழங்கப்படும். தகவல் தெரிவிப்போர் பற்றிய தகவல் ரகசியம் காக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளனர்.