மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க இங்கிலாந்து உள்துறை அனுமதி! | Vijay Mallya's Extradition Order to India Cleared by UK Home Secretary

வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (05/02/2019)

கடைசி தொடர்பு:08:05 (05/02/2019)

மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க இங்கிலாந்து உள்துறை அனுமதி!

விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க இங்கிலாந்து உள்துறை அனுமதி அளித்துள்ளது.

மல்லையா

தன்னுடைய கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கடன் நெருக்கடியில் சிக்கித்தவித்தபோது, அதை மீட்டெடுக்க ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட 13 பொதுத்துறை வங்கிகளிலிருந்து 9,000 கோடி ரூபாய்க் கடனாகப் பெற்றார் விஜய் மல்லையா. ஆனால், அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்த அவர் மீது கடந்த 2015-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு போடப்பட்டதை அடுத்து மல்லையா லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார். 

பின்னர் விஜய் மல்லையா மீது சி.பி.ஐ-யும் அமலாக்கத்துறையும் வழக்குகளைப் பதிவு செய்தன. லண்டனில் இருக்கும் மல்லையாவை நாடு கடத்தும்படி பிரிட்டனுக்கு இந்திய அரசு கோரிக்கை விடுத்தது. மேலும், இந்தியாவைச் சேர்ந்த 13 வங்கிகளின் கூட்டமைப்பு சார்பில் மல்லையாவின் சொத்துகளை முடக்க உலகளாவிய உத்தரவைப் பிறப்பித்தன. அதை இங்கிலாந்தில் பதிவு செய்தன. இதை எதிர்த்து மல்லையா லண்டன் நீதிமன்றத்தில் முறையிட்டார். ஆனால், அவரின் கோரிக்கையை ஏற்க மறுத்த பிரிட்டன் நீதிமன்றம் மல்லையா சொத்துகளை முடக்க  உத்தரவிட்டது. 

மல்லையா

இதனிடையே மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கு விசாரணை லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின்போது விசாரணைக்காக இந்தியாவுக்குக் கொண்டு செல்லத் தடையில்லை என லண்டன் நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்தது. லண்டன் கோர்ட்டின் தீர்ப்பின்படி, மல்லையாவை பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்த அந்நாட்டு உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதற்கான உத்தரவில் பிரிட்டன் உள்துறை அமைச்சர் நேற்று கையெழுத்திட்டார். அதேநேரம் இந்த அனுமதிக்கு எதிராக மல்லையா மேல்முறையீடு செய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது. 15 நாள்களுக்குள் அவர் மேல்முறையீடு செய்யலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அப்படி மேல்முறையீடு செய்தால் மல்லையா இந்தியா கொண்டுவரப்படுவது மேலும் தாமதமாக வாய்ப்பு இருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க