`இது அரசியலமைப்புக்குக் கிடைத்த வெற்றி!’ - தர்ணாப் போராட்டத்தைக் கைவிடுவதாக மம்தா அறிவிப்பு | West Bengal Chief Minister Mamata Banerjee end this dharna

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (05/02/2019)

கடைசி தொடர்பு:20:00 (05/02/2019)

`இது அரசியலமைப்புக்குக் கிடைத்த வெற்றி!’ - தர்ணாப் போராட்டத்தைக் கைவிடுவதாக மம்தா அறிவிப்பு

மம்தா பானர்ஜி

சாரதா நிதி மோசடி வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கு வங்கத்தில் அதிரடியாக நுழைந்து கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த முயன்றனர். இந்த வழக்கு தொடர்பாக சில ஆவணங்கள் விட்டுப்போனதாகவும், அதுகுறித்து கேட்டதற்கு எந்தத் தகவலும் இல்லை எனக் காரணம் காட்டி இந்த நடவடிக்கையை சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்டார். ஆனால், காவல் ஆணையர் இல்லத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், சிபிஐ அதிகாரிகளை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனையடுத்து இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு விரைந்த உள்ளூர் காவல்துறையினர் சிபிஐ அதிகாரிகளைக் கைது செய்து, காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இந்த விவகாரத்தால் தேசிய அளவில் திடீர் பரபரப்பு உண்டானது.

கொல்கத்தா ஆணையர் வீட்டுக்கு விரைந்த அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். இது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனக் கூறிய மம்தா, அரசியலமைப்பைக் காக்கக் கோரி தர்ணாவில் அமர்ந்தார். இவருக்குப் பல்வேறு அரசியல் கட்சியினரும் நேரில் சென்று தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி நேற்று நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் மத்திய அரசுக்கு எதிராக மூன்றாவது நாளாக நீடித்த தர்ணாப் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக, மம்தா அறிவித்தார். இன்றைய தர்ணா போராட்டத்தின்போது மம்தாவுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

தர்ணா

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, ``இந்தப் போராட்டம் ஜனநாயகம், அரசியலமைப்புக்குக் கிடைத்த வெற்றி. நீதிமன்றத்தில் எங்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வந்ததால் தர்ணாவைக் கைவிட்டுள்ளேன். அடுத்த வாரத்தில் இந்த விவகாரத்தை டெல்லிக்கு எடுத்துச் செல்வோம். மத்திய அரசு அனைத்து ஆணையங்களையும் கட்டுப்படுத்த நினைக்கிறது. மோடி, நீங்கள் டெல்லியிலிருந்து கிளம்பி குஜராத்துக்குச் சென்றுவிடுங்கள். தனி நபரின் அரசு, ஒரு கட்சியின் அரசாங்கம் நடந்து வருகிறது” என்று விமர்சித்தார்.