`நக்சல்கள் பகுதியில் ஹெலிகாப்டர், ஏர் ஆம்புலன்ஸ்!’ - 6 மாநில டி.ஜி.பி-க்கள் கூட்டத்தில் ஆலோசனை | 6 States DGP meeting in thirupathi for 2019 parliament election

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (05/02/2019)

கடைசி தொடர்பு:21:00 (05/02/2019)

`நக்சல்கள் பகுதியில் ஹெலிகாப்டர், ஏர் ஆம்புலன்ஸ்!’ - 6 மாநில டி.ஜி.பி-க்கள் கூட்டத்தில் ஆலோசனை

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி, தேர்தல் பாதுகாப்புப் பணிகள்குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆந்திர மாநிலம், திருப்பதியில் இன்று நடைபெற்றது. இதில், நக்சல்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்வதுகுறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

நாடாளுமன்றம்

2019 நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்புகள் இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், ஒவ்வொரு மாநிலத்திலும் சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு ஏற்பாடுகள், சாதக பாதக அம்சங்கள்குறித்த அறிக்கையைத் தேர்தல் ஆணையம் பெற்று, அதற்கான முன்னேற்பாடுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் செய்வது வழக்கம். இந்தநிலையில், 6 மாநில காவல்துறை தலைவர்கள் கலந்துகொள்ளும் ஆலோசனைக் கூட்டம் திருப்பதியில் நடைபெற்றது.

வாக்குப் பதிவு

ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்றே சென்றுவிட்டார், தமிழக டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன். நேற்று இரவு திருப்பதியிலேயே தங்கி, அதிகாலையில் ஏழுமலையானைத் தரிசனம்செய்தார். இதைத் தொடர்ந்து தேர்தல் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார். மதியம் 12.00 மணிக்குத் தொடங்கிய இந்தக் கூட்டம், 1.30 மணி வரை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, சத்தீஸ்கர், ஒடிசா ஆகிய ஆறு மாநிலத்தைச் சேர்ந்த 12 காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தல் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்குறித்து அதிகாரிகள் ஆலோசனை செய்தனர்.

நக்சல்கள் பகுதி, தெலங்கானா

இதுகுறித்து ஆந்திர டி.ஜி.பி தாக்கூர், ``சத்தீஸ்கர், ஒடிசா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் நக்சல்கள் இருப்பதால், அங்கே எந்த மாதிரியான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்பதுகுறித்து ஆலோசனை செய்தோம். குறிப்பாக, ஆந்திராவில் நக்சல்களின் பாதிப்பு அதிகம் இருக்கிறது. நக்சல்கள் அதிகம் இருக்கும் இடங்களில், பாதுகாப்புப் பணிக்கு ஹெலிகாப்டர்கள் பயன்படுத்துவது குறித்தும், ஏர் ஆம்புலென்ஸ் பயன்படுத்துவது குறித்தும் ஆலோசனை செய்தோம்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க