இமயமலை உருகும் அபாயம் - எச்சரிக்கை விடுத்த சர்வதேச மையம்! | Himalaya hills in dangerous condition

வெளியிடப்பட்ட நேரம்: 21:02 (05/02/2019)

கடைசி தொடர்பு:21:02 (05/02/2019)

இமயமலை உருகும் அபாயம் - எச்சரிக்கை விடுத்த சர்வதேச மையம்!

ருங்கிணைந்த மலை அபிவிருத்திக்கான சர்வதேச மையம், இமயமலையில் ஓர் ஆய்வை மேற்கொண்டது. அதில் வெளியிடப்பட்ட அறிக்கையில், 'பருவநிலை மாற்றத்தால் இமயமலை பெரிதும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்' எனத் தெரிவித்துள்ளது.

இமயமலை

இந்து குஷ் மலை மற்றும் இமயமலைப் பகுதிகளில் உள்ள பனிமலைகளில் நடத்திய ஆய்வில், பருவநிலை மாற்றம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக வளர்ந்துவருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இப்போது வெளியிடப்படும் கார்பன் - டை - ஆக்ஸைடு அளவானது வெகுவாகக் குறைக்கப்பட வேண்டும். அது நிறுத்தப்படவில்லை என்றால், மூன்றில் இரண்டு பங்கு பனிமலைகள் காணாமல்போகும் அபாயம் உள்ளது. 

வெப்பநிலையை 1.5 செல்ஷியஸ் அளவு கட்டுக்குள் வைத்தாலும்கூட, ஒரு பங்கு மலைப் பகுதி முற்றிலுமாக உருகிவிடும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இமயமலையைச் சுற்றி இருக்கும் 8 நாடுகளுக்கு முக்கிய தண்ணீர் ஆதாரம், இந்தப் பனிமலைகள்தான். இப்போதுள்ள நிலை தொடர்ந்தால், ஒரு நூற்றாண்டுக்குள் பனி கரைந்து வெறும் பாறைகளைக் கொண்ட மலையாக மாறிவிடும். புவி வெப்பமயமாதல் மற்றும் காற்று மாசு காரணமாக இன்னும் சில வருடங்களில் பனி மலைகள் உருகத்தொடங்கும் என்கின்றனர், ஆய்வாளர்கள்.

பனிக்கட்டிகளின்மேல் கார்பன் மற்றும்  தூசு படர்வதால், பனிக்கட்டிகள் வேகமாக உருகிவருகின்றன. உலக வெப்பநிலை இரண்டு டிகிரி செல்ஷியஸ் அதிகரித்தால், 2100-ல் பனிமலைகளில் பாதி இருக்காது. உலகம் உடனடியாகத் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு, வெப்பநிலை உயர்வை 1.5 செல்ஷியஸ் அளவுக்குள் குறைத்தாலும்கூட, பனிமலைகளில் 36 சதவிகிதம் காணாமல் போய்விடும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.