நிஜமாகக் காதலித்தாரா; இல்ல, மோடியின் விஸ்வாசத்தால் இப்படிச் செய்தாரா?- காதலனின் செயலால் குமுறிய இளம்பெண் | the love of Modi couple got break up in a month

வெளியிடப்பட்ட நேரம்: 10:32 (06/02/2019)

கடைசி தொடர்பு:10:56 (06/02/2019)

நிஜமாகக் காதலித்தாரா; இல்ல, மோடியின் விஸ்வாசத்தால் இப்படிச் செய்தாரா?- காதலனின் செயலால் குமுறிய இளம்பெண்

நமோ டி-சர்டுடன் போஸ் கொடுத்து சமீபத்தில் வைரலானது குஜராத்தைச் சேர்ந்த ஒரு ஜோடி. ஜெய் தேவ் என்ற இளைஞர்  மோடியின் தீவிர ரசிகர். அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் மோடியை டேக் செய்து ஒரு பதிவு வெளியிட்டிருந்தார்.

வைரல் போட்டோ

அதில், ‘நான் உங்களுக்கு ஆதரவு தெரிவித்து ராகுல் காந்தியின் ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டேன். என் கருத்துக்கு இந்த அழகான பெண் தொடர்ந்து லைக் செய்துவந்தார். நாங்கள் சந்தித்தோம், பேசினோம். நாங்கள் இருவரும் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம் ஏனெனில், நாங்கள் இந்தியாவுக்காக வாழ விரும்புகிறோம். அதனால் நாங்கள் இணைந்திருக்க முடிவு செய்துள்ளோம்’ எனக் குறிப்பிட்டிருந்தார். இவரின் பதிவு சமூக வலைதளங்களில் பெரும் ஹிட் அடித்தது.

பிறகு, குஜராத்தைச் சேர்ந்த ஜெய் தேவும் பெங்களூருவைச் சேர்ந்த அல்பிகா பாண்டேவும் கடந்த டிசம்பரில் திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியானது. திருமணம் முடிந்து ஒரு மாதமே ஆன நிலையில் தற்போது அந்தப் பெண், தேவ் மீது தொடர் புகார்கள் தெரிவித்து தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

அவரின் பதிவில், ‘நமோ டி-சர்ட் அணிந்து தேவ் உடன் இருந்த பெண் நான்தான். எனக்கு 18 வயது மட்டுமே ஆகிறது. ஆனால் தேவுக்கு 29 வயதாகிறது. அது அவரின் முகத்திலேயே தெரியும். அவர் தன் சொந்த விளம்பரத்துக்காக அனுமதியில்லாமல் என் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டார். இதன் மூலம் பா.ஜ.க-வில் தன்னை மிகைப்படுத்திக்கொண்டார்.

தேவ் என்னை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் அதிகம் துன்புறுத்துகிறார். இதனால் நான் தற்கொலைக்குக்கூட முயற்சி செய்தேன். அவரின் வீட்டில் எனக்கு சுதந்திரம் இல்லை. போனில் நான் என்ன செய்கிறேன் என அனைத்தையும் வெளிப்படையாகத் தேவிடம் காட்டினேன். இருந்தும் அவர் என் போனை திருடிச் சென்று பார்க்கிறார். அவர் என் சுய விருப்பங்களுக்கு மதிப்பளிப்பதில்லை. தேவின் வீட்டில் இருந்து நான் வெளியில் வர வேண்டும் என்றால் பிறரின் உதவியுடன் மட்டுமே செல்ல வேண்டும் எனக் கூறுகிறார்கள். 

கௌரவம் என்ற பெயரில் என் சுதந்திரத்தைப் பறித்துவிட்டனர். எனக்கு உண்மையில் சந்தேகமாக உள்ளது. தேவ் என்னை நிஜமாகக் காதலித்தாரா இல்லை மோடியின் பக்தன் என்பதை நிரூபிக்க இவ்வாறு செய்தாரா என்று தெரியவில்லை.  இதற்காக நான் மோடியைக் குறை கூறுகிறேன் என அர்த்தமில்லை. நானும் மோடியின் தீவிர ரசிகைதான். விளம்பரத்துக்காக எதுவும் செய்யாதீர்கள் என்றுதான் கூறுகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

இவரின் பதிவுக்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் மோடியை விமர்சித்தும் சிலர் இணைய காதலை கடுமையாகச் சாடியும் வருகின்றனர்.