பார்ட்னர் மனைவியுடன் நட்பு; டாக்டரின் விபரீத செயல்! - கணவரின் உடலை ஆசிட்டில் கரைத்த கொடூரம் | Doctor kill his driver and dissolves pieces in acid

வெளியிடப்பட்ட நேரம்: 12:54 (06/02/2019)

கடைசி தொடர்பு:13:23 (06/02/2019)

பார்ட்னர் மனைவியுடன் நட்பு; டாக்டரின் விபரீத செயல்! - கணவரின் உடலை ஆசிட்டில் கரைத்த கொடூரம்

மத்தியப் பிரதேசம் மாநிலம் ஹோசங்கபாத் பகுதியைச் சேர்ந்த ஒரு அரசு மருத்துவர் தன்னிடம் பணிபுரிந்த கார் டிரைவரைக் கொலை செய்து அவரது உடலை ஆசிட்டில் கரைத்துள்ளார். 

மருத்துவர் சுனில்

கொலை செய்த பிறகு ரத்தக் கறைகளுடன் தன் வீட்டிலிருந்து வெளியில் வரும்போது அவரைக் கண்ட அக்கம் பக்கத்தினர் இது தொடர்பாக காவல் துறையினருக்குத் தகவல் கொடுக்கவே உடனடியாக விரைந்து வந்த காவலர்கள் மருத்துவரைக் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. 

இந்த விவகாரம் குறித்து ஹோசங்கபாத் எஸ்.பி அரவிந்த் கூறும்போது, ``மருத்துவர் சுனில் மத்ராவுக்கு 58 வயதாகிறது. அவர் ஹோசங்கபாத், ஆனந்த் நகரில் உள்ள வசதியான குடியிருப்பில் வசித்து வருகிறார். அவருக்கு 26 வயதில் ஒரு மகனும், 23 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இருவரும் மும்பையில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

சுனிலின் மனைவியும், இறந்த பிரேந்திராவின் மனைவியும் இணைந்து ஆனந்த் நகரில் உள்ள மருத்துவரின் குடியிருப்புக்கு அருகில் பெண்கள் அழகு சாதன கடை ஒன்றை நடத்தி வந்துள்ளனர். 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மருத்துவரின் மனைவி உயிரிழந்துள்ளார். அதன் பின்பு அந்தக் கடையை பிரேந்திராவின் மனைவி மட்டும் தனியாக கவனித்து வந்துள்ளார். மனைவி இறந்த பிறகு, பிள்ளைகளும் மும்பை சென்றதால் கடந்த இரண்டு வருடங்களாக சுனில் மட்டும் தனியாக வாழ்ந்துவந்துள்ளார்.

இதற்கிடையில் சுனிலுக்கும் பிரேந்திராவின் மனைவிக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கிப் பழகத் தொடங்கியுள்ளனர். இந்த விஷயம் பிரேந்திராவுக்குத் தெரியவர அவர் அடிக்கடி பணம் கேட்டு மருத்துவரை மிரட்டியுள்ளார். அவரின் தொல்லை தாங்க முடியாமல் கேட்கும்போதெல்லாம் பணம் கொடுத்து வந்துள்ளார் மருத்துவர். 

கொலை

இதைச் சரி செய்ய நினைத்த சுனில், பிரேந்திராவை தன் கார் ஓட்டுநராகச் சேர்த்துக்கொண்டுள்ளார். தக்க சமயத்துக்காகக் காத்திருந்த மருத்துவருக்கு ஏதுவாக, பணிக்குச் சேர்ந்த இரு தினங்களில் பல் வலி என சுனிலிடம் தெரிவித்துள்ளார் பிரேந்திரா. பிறகு பல் வலி மாத்திரையுடன் மயக்க மாத்திரையும் சேர்த்து கொடுத்து பிரேந்திராவை சாப்பிட வைத்துள்ளார் மருத்துவர். பிரேந்திரா மயங்கியதும் கத்தியால் அவரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். பின்னர் அவரின் உடலை 25 பாகங்களாக வெட்டி தயாராக வைத்திருந்த ஆசிட் ட்ரம்மில் போட்டுக் கரைத்துள்ளார்.

கொலை செய்த பதற்றத்தில் இருந்த மருத்துவர், தன் உடையில் ஒட்டியிருந்த ரத்தக் கறையுடன் தன் வீட்டைவிட்டு வேகமாக வெளியில் வந்துள்ளார். இதைக் கவனித்த அருகில் இருப்பவர்கள் எங்களிடம் புகார் தெரிவித்தனர்” எனக் கூறியுள்ளார். 

மேலும் அவர் கூறுகையில், ``தகவலறிந்து நாங்கள் சுனில் வீட்டுக்குச் சென்று பார்த்தோம் அங்கு அவர் ரத்தக் கறைகளுடன் அமர்ந்திருந்தார். அவரைக் கைது செய்து வீட்டில் இருந்த ஆசிட் ட்ரம்மையும் பறிமுதல் செய்துள்ளோம்” எனக் குறிப்பிட்டுள்ளார் எஸ்.பி. அரவிந்த். மத்தியப் பிரதேசத்தில் நடந்த இந்தக் கொடூர கொலை சம்பவம் அம்மாநில மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.