`உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கிறோம்! - சபரிமலை விவகாரத்தில் பின்வாங்கிய தேவசம் போர்டு | Will Respect Judgement, Says Dewasom Board

வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (06/02/2019)

கடைசி தொடர்பு:16:23 (06/02/2019)

`உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கிறோம்! - சபரிமலை விவகாரத்தில் பின்வாங்கிய தேவசம் போர்டு

சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் எனக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்ற ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்புக்கு இந்தியா முழுவதும் எதிர்ப்புகளும் ஆதரவுகளும் பெருகின. தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு பல இளம் பெண்கள் சபரிமலைக்குச் செல்ல முற்பட்டனர். ஆனால் கோயிலில் இருந்த ஆண் பக்தர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தியதால் பதற்றம் நிலவியது. இதனால் மகர பூஜை காலங்களில் கேரளா முழுவதும் பரபரப்பாகக் காணப்பட்டது. இதையடுத்து ஜனவரி 2-ம் தேதி கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த பிந்து மற்றும் மலப்புரத்தைச் சேர்ந்த கனக துர்கா ஆகிய இரு பெண்களும் சபரிமலை சந்நிதானத்துக்குள் சென்று ஐயப்பனைத் தரிசனம்செய்தனர். இவர்கள் கோயிலுக்குள் சென்றதைத் தொடர்ந்து கேரள மாநிலம் முழுவதும் போராட்டக் களமாக மாறியது. கலரவரங்கள், கைதுகள் நடைபெற்றன.

சபரிமலை

இரண்டு பெண்கள் சபரிமலைக்குச் சென்றதுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உச்சநீதிமன்ற உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் நாடு முழுவதிலுமிருந்து பல மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. சபரிமலை விவகாரம் தொடர்பாக தீர்ப்பு வழங்கி நான்கு மாதங்கள் கடந்த நிலையில் இன்று மேல்முறையீட்டு மனு மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. இன்று காலை 10:30 மணிக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் ரோஹிண்டன் நரிமன், ஏ.எம் கான்வில்கர், சந்திரசிட், இந்து மல்கோத்ரா ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்தது. அப்போது பேசிய தலைமை நீதிபதி, `மொத்தம் 54 மறு சீராய்வு மனுக்களும் சில பொது நல மனுக்களும் வந்துள்ளன. இவை அனைத்தையும் விசாரிக்க வேண்டும். யார் முதலில் வாதத்தை தொடங்குகிறீர்கள்? எனக் கேள்வி எழுப்பினார். இதையடுத்து சபரிமலை தந்திரி தரப்பில் பேசிய மூத்த வழக்கறிஞர் வி.கிரி, `பிரம்மசர்யம் என்பது ஐய்யப்பன் மட்டுமே கொண்ட தனிச் சிறப்பு. அவரின் அந்தச் சிறப்பு காக்கப்பட வேண்டும்.

சபரிமலை

இத்தனை வருடங்களாக சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் யாரும் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக கேள்வி எழுப்பவில்லை. தற்போது நீதிமன்றத்தில் எந்த பக்தரும் மனுத்தாக்கல் செய்யவில்லை’ என வாதிட்டார். பிறகு தேவசம் போர்டு முன்னாள் தலைவர் தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, `சபரிமலை கோயிலில் பின்பற்றப்படும் மத நம்பிக்கையினால் மட்டுமே குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் அனுமதி மறுக்கப்படுகிறார்களே தவிர சாதி, தீண்டாமை அடிப்படையில் இல்லை’ எனக் கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி ரோகிண்டன் நாரிமன், `மதம் என்பது ஒரு நம்பிக்கை. இந்து மதத்தில் உள்ளவர்கள் சில விஷயங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெறும் தீண்டாமை விஷயத்தைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதில்லை. அதில் உள்ள பல விஷயங்களை நன்கு ஆராய்ந்த பிறகே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தார். இதையடுத்து அனைத்து தரப்பினர் வாதங்களும் முன்வைக்கப்பட்டன.

உச்சநீதிமன்றம்

இதற்கிடையில், `அரசியலமைப்பைக் குலைக்கும் வகையில் நடக்கும் எந்த நிகழ்வாக இருந்தாலும் அதை அரசு அனுமதிக்காது. அரசியல் சாசனத்துக்கு எதிராகக் கடைபிடிக்கப்படும் மத நம்பிக்கைகளில் நீதிமன்றம் கண்டிப்பாக தலையிடலாம். அதனால் முன்னதாக வழங்கிய தீர்ப்பை மாற்றத் தேவையில்லை’ எனக் கேரள அரசு சார்பில் வாதிடப்பட்டது. பிறகு உணவு இடைவேளிக்குப் பிறகு மீண்டும் கூடிய அமர்வில் முதலாவதாக தேவசம் போர்டு சார்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

சபரிமலை

`கோயிலுக்குள் நுழைய அனைவருக்கும் உரிமை உண்டு. சமத்துவத்தின் அடிப்படையில் அனைவரும் ஒன்றுதான். எனவே 10 முதல் 50 வயதுப் பெண்களை சபரிமலைக்கு அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம். இந்து மதத்தில் பெண்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவது இன்றியமையாதது. வாழ்வில் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் நுழையும்போது எங்களின் நிலைப்பாட்டையும் மாற்றிக்கொள்கிறோம்’ எனத் தெரிவித்தனர். `இரு பெண்கள் கோயிலுக்குள் சென்று திரும்பியதும் கோயில் முழுவதும் தூய்மை செய்யப்பட்டுள்ளது. சபரிமலை சென்ற இரு பெண்களுக்கு எதிராக சமூகப் புறக்கணிப்பு நடைபெறுகிறது’ என வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் வாதிட்டார். இதைத்தொடர்ந்து வாதங்களை கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதியைக் குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தனர்.