குழந்தைகளுக்கான உலகமாக இது இல்லை! - பிரசாரத்தை முன்னெடுக்கும் `ஸ்டாப் மேக்கிங் பேபீஸ்’ | Reasons behind the Stop Making Babies Meet

வெளியிடப்பட்ட நேரம்: 18:12 (06/02/2019)

கடைசி தொடர்பு:18:32 (06/02/2019)

குழந்தைகளுக்கான உலகமாக இது இல்லை! - பிரசாரத்தை முன்னெடுக்கும் `ஸ்டாப் மேக்கிங் பேபீஸ்’

நீர், நிலம், காற்று என்று உயிர் வாழ்வதற்குத் தேவையான அத்தனை விஷயங்களையும் சரிசெய்ய முடியாத அளவுக்கு மாசுப்படுத்திவிட்டு, அந்த மாசுபாட்டில் வாழ்வதற்கு, குழந்தைகளையும் பெற்றுக்கொள்வது எத்தனை பெரிய அநியாயம். 

'குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டோம்' என்ற அர்த்தம் வரும் வண்ணம் 'ஸ்டாப் மேக்கிங் பேபீஸ்' என்ற பேனருடன், வரும் 10-ம் தேதி இந்தியா முழுவதும் இருந்து 150 பேர் ஒன்றுகூடப்போகிறார்கள். இது நடக்கப்போவது பெங்களூருவில். இந்த சந்திப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான அனுக்ரஹா என்பவரிடம் பேசினோம். 

குழந்தை வேண்டாம் பெங்களூரு குரூப்

''குழந்தைகள்  பெற்றுக்கொள்ள வேண்டாம் என்பதில் ஒத்த சிந்தனையுள்ளவர்கள் ஒன்றுகூடி, நாங்கள் ஏன் இப்படியொரு முடிவெடுத்தோம் என்று இந்த சமூகத்துக்கு சொல்லப்போகிறோம்'' என்றவரிடம், உங்கள் கருத்துக்குள் ஏதாவது நியாயம் இருக்கிறதா என்றோம். 

டெல்லி குரூப்

''மக்கள்தொகை பெருகிப்போய்விட்டது. அதனால் நீர், நிலம், காற்று என்று உயிர் வாழ்வதற்குத் தேவையான அத்தனை விஷயங்களையும் சரிசெய்ய முடியாத அளவுக்கு மாசுப்படுத்திவிட்டு, அந்த மாசுபாட்டில் வாழ்வதற்கு குழந்தைகளையும் பெற்றுக்கொள்வது எத்தனை பெரிய அநியாயம். 

அடுத்தது, வேலையில் நிறைய சாதிக்க நினைக்கிற சில பெண்களும் எங்களுடன் ஒன்றிணைந்து, 'ஸ்டாப் மேக்கிங் பேபீஸ்' என்று சொல்லப்போகிறார்கள். ' கரியரைப் பாழாக்கி, உடல் நலத்தையும் பாழாக்கி ஒரு குழந்தையைப் பெற்று, இந்த மாசுப்பட்ட உலகில் வாழ விடுவதைவிட, ஏற்கெனவே பிறந்து அநாதையாக இருக்கிற குழந்தைகளைத் தத்தெடுத்துக்கொள்ளலாமே' என்பவர்கள் அவர்கள். அதனால், பிப்ரவரி 10 அன்று, அப்படிப்பட்ட பெண்களும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளப்போகிறார்கள்'' என்றவரிடம், இதன்மூலம் இந்த உலகத்துக்கு என்ன சொல்லவருகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினோம். 

குஜராத் குரூப்

''நாமெல்லாம் சேர்ந்து, பிறக்கப்போகிற குழந்தைகள் வாழ முடியாத அளவுக்கு இந்த உலகத்தைப் பாழாக்கி வைத்திருக்கிறோம் என்பதை இந்த உலகத்துக்கு உரக்கச் சொல்லப்போகிறோம். ஸ்டாப் மேக்கிங் பேபீஸ்'' என்று உணர்வுபூர்வமாகப் பேசினார், அனுக்ரஹா.