பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆப்சென்டான 7 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள்! - கர்நாடகாவில் மீண்டும் பரபரப்பு | 7 Congress MLAs missed first day of Karnataka Budget session

வெளியிடப்பட்ட நேரம்: 11:10 (07/02/2019)

கடைசி தொடர்பு:11:10 (07/02/2019)

பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆப்சென்டான 7 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள்! - கர்நாடகாவில் மீண்டும் பரபரப்பு

கர்நாடக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாள் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் 7 பேர் கலந்துகொள்ளாதது அம்மாநில அரசியலில் புதிய பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. 

சித்தராமையா

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அரசுக்குக் காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்தக் கூட்டணியைக் குலைக்க பா.ஜ.க சதி செய்வதாக காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த தலைவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். `ஆபரேஷன் கமலா’ என்ற பெயரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க பா.ஜ.க முயன்று வருவதாகக் கூறி, அவர்களைப் பாதுகாப்பாக ரிசார்ட்டில் தங்கவைத்தனர் கர்நாடக காங்கிரஸ் கட்சியினர். அதேபோல், தங்கள் கட்சி எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணியினர் முயலுவதாகக் கூறி அவர்களை ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ரிசார்ட் ஒன்றில் கர்நாடக பா.ஜ.க-வினர் தங்கவைத்தனர். இந்தக் காட்சிகள் சில நாள்கள் நீடித்தது. 

இந்தச் சூழலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் 11 பேர் மாயமானதாகத் தகவல்கள் வெளியாகின. இந்தத் தகவல் வெளியான சில நாள்களில் மாயமானதாகக் கூறப்பட்ட 11 எம்.எல்.ஏ-க்கள் கடந்த சில நாள்களுக்கு முன் பெங்களூரு திரும்பினர். சொகுசுக் கார்கள் உள்ளிட்ட அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற காங்கிரஸ் தலைமை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. பெங்களூருவுக்குத் திரும்பிய பின்னர், குமாரசாமி அரசு நிலையானது அல்ல என்று கூறி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாகக் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் இருவர் அறிவித்தனர்.

குமாரசாமி


இந்த நிலையில், கர்நாடக சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. பிப்ரவரி 6-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் சட்டப்பேரவைக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், கர்நாடக அரசியலில் புதிய பரபரப்புக் கிளம்பியிருக்கிறது. பட்ஜெட் கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சியின் 80 எம்.எல்.ஏ-க்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா உத்தரவிட்டிருந்த நிலையில், 7 பேர் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.