`வதேரா வழக்கில் சீரியஸான விஷயம் எதுவுமே இல்லை!' - மத்திய அரசை சாடும் மம்தா | There is no serious in Robert Vadra case says mamta banerjee

வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (07/02/2019)

கடைசி தொடர்பு:12:00 (07/02/2019)

`வதேரா வழக்கில் சீரியஸான விஷயம் எதுவுமே இல்லை!' - மத்திய அரசை சாடும் மம்தா

சாரதா சிட்பண்ட் நிதி முறைகேடு வழக்கில் கொல்கத்தா மாநகர கமிஷனர் ராஜீவ் குமாரை சி.பி.ஐ விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து, தொடர்ந்து மூன்று நாள்கள் தர்ணாவில் ஈடுபட்டிருந்தார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. இவரின் போராட்டம் இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

மம்தா பானர்ஜி

இதையடுத்து மத்திய பா.ஜ.க அரசு மீதும் மோடி மீதும் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களைத் தெரிவித்து வருகிறார் மம்தா. இந்த நிலையில், பிரியங்கா காந்தி கணவர், ராபர்ட் வதேராவிடம் பண மோசடி வழக்கு தொடர்பாக நேற்று அமலாக்கத் துறையினர் தொடர்ந்து ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். 

ராபர்ட் வதேரா

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, ‘வதேரா வழக்கில் சீரியஸான விஷயம் எதுவுமே இல்லை. மிகவும் சாதாரணமாக அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பிக்கொண்டுள்ளனர். எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றாக இணைந்து நிற்பது அவர்களுக்குப் (மத்திய அரசு) பிடிக்கவில்லை. தேர்தலுக்காகவே இது திட்டமிட்டு செய்யப்படுகிறது’ என தெரிவித்துள்ளார்.

சோனியா காந்தியின் மருமகனும் பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா லண்டனில் பிரையன்ஸ்டன் பகுதியில் சொத்து வாங்கியதில் 1.9 மில்லியன் பவுண்டுகள் வரை முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.