ரிசர்வ் வங்கி வட்டி விகிதம் குறைப்பு! - வங்கிக் கடனுக்கான தவணைச்சுமை குறைய வாய்ப்பு | RBI Cuts Repo Rate by 0.25 Basis Points to 6.25 per cent

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (07/02/2019)

கடைசி தொடர்பு:15:00 (07/02/2019)

ரிசர்வ் வங்கி வட்டி விகிதம் குறைப்பு! - வங்கிக் கடனுக்கான தவணைச்சுமை குறைய வாய்ப்பு

வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.25% குறைத்துள்ளது. இதன்மூலம் தற்போதைய வட்டி விகிதமான 6.50 சதவிகிதமானது 6.25 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இதற்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் வெளியிட்டார். இதற்கு முன்னர், கடந்த 2017, ஆகஸ்ட் மாதத்தில்தான் வட்டிவிகிதம் குறைக்கப்பட்டது. அதன்பின்னர், 17 மாதங்களுக்குப் பிறகு தற்போது வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருக்கிறது. 

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்ததாஸ் தலைமையில் ஆறு உறுப்பினர்களைக் கொண்ட நிதிக்கொள்கை ஆய்வுக்கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வட்டி விகிதத்தைக் குறைத்துள்ள முடிவு குறித்து விவாதிக்கப்பட்டு ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. அதில் 4-2 என்ற விகிதத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் ஒப்புதல் பெறப்பட்டது.

குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளதால் பொதுத்துறை வங்கிகளுக்கு பணப்புழக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, வீட்டுக்கடன், வாகனக்கடன் ஆகியவற்றுக்கான வட்டி விகிதத்தை இந்த வங்கிகள் குறைத்துக்கொள்வதற்கு வாய்ப்புள்ளது. எனவே, மாதத்தவணை செலுத்துவோரின் தவணைச்சுமை குறையக்கூடும். இந்த அறிவிப்பு, பொதுமக்களுக்கு பயனளிக்கக்கூடியதாக இருக்கக்கூடும்.