15,000 மரங்கள் நடவேண்டும் - 2ஜி வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு | Delhi HC’s Punishment to 2G Accused for Seeking More Time to File Reply

வெளியிடப்பட்ட நேரம்: 18:10 (07/02/2019)

கடைசி தொடர்பு:18:10 (07/02/2019)

15,000 மரங்கள் நடவேண்டும் - 2ஜி வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக, மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, அத்துறையின் செயலராக இருந்த சித்தார்த் பெஹுரா, தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, சாஹித் பால்வா உள்ளிட்ட 14 பேர் மீதும் ஸ்வான் டெலிகாம், ரிலையன்ஸ் டெலிகாம், யுனிடெக் வயர்ஸ் ஆகிய மூன்று தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதன் இறுதித் தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட 14 பேரும் விடுதலைசெய்யப்பட்டனர்.

2ஜி

இவர்களின் விடுதலையை எதிர்த்து, அமலாக்கத்துறை டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடுசெய்தது. கடந்த வருடம் தொடரப்பட்ட இந்த வழக்கில், தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கு தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள், தங்கள் பதில் மனுக்களைத் தாக்கல்செய்ய வேண்டும் என முன்னதாக நீதிமன்றம் கூறியிருந்தது.

டெல்லி உயர்நீதிமன்றம்

நீதிமன்றம் அறிவித்தும் இதுவரை சிலர் பதில் மனுக்களைத் தாக்கல்செய்யவில்லை. இன்னும் கால அவகாசம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இன்று, மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நஜ்மி நஸிரி பதில் மனு தாக்கல்செய்யாத சாஹித் பால்வா, ராஜீவ் அகர்வால் மற்றும் மூன்று தனியார் நிறுவனங்கள், தெற்கு டெல்லி பகுதியில் தலா 3000 மரக் கன்றுகளை நட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மரக் கன்றுகள் நடுவது தொடர்பாக, வரும் 15-ம் தேதி அனைவரும் வனத் துறை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை மார்ச் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.