கியர் லீவருக்குப் பதிலாக மூங்கில்! - மும்பை மக்களை அதிரவைத்த பள்ளி வேன் | School Bus Driver Arrested for Using Bamboo Stick Instead of Gear Lever

வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (07/02/2019)

கடைசி தொடர்பு:18:50 (07/02/2019)

கியர் லீவருக்குப் பதிலாக மூங்கில்! - மும்பை மக்களை அதிரவைத்த பள்ளி வேன்

கியர் லீவருக்குப் பதில் மூங்கில் கம்பைப்  பயன்படுத்தி, பள்ளி வேனை ஓட்டிவந்த  டிரைவர், மும்பையில்  கைதுசெய்யப்பட்டுள்ளார். 

மூங்கில் கியர்

மும்பை கார் (மேற்கு) பகுதியில் பி.எம். டபிள்யூ  கார்மீது பள்ளி வேன் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றது.  காரில் இருந்தவர், பள்ளி வேனை துரத்திச்சென்று மடக்கினார். வேனுக்குள் எட்டிப்பார்த்த போது, கியர் லீவருக்குப் பதிலாக மூங்கில் கம்பைப் பயன்படுத்தி  ஓட்டுநர் பள்ளி வேனை ஓட்டியது தெரியவந்தது.  வேனில் குழந்தைகளும் இருந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பி.எம்.டபிள்யூ கார் ஓட்டுநர்  உடனடியாக, போலீஸுக்கும் தகவல் அளித்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், பள்ளி வேன் ஓட்டுநர் ராஜ்குமார் என்பவரைக் கைது செய்தனர். 

விசாரணையில், 'உடைந்துபோன கியர் லீவரை ரிப்பேர் செய்ய தனக்கு நேரமில்லாத காரணத்தினால் மூங்கில் கம்பை கியர் லீவராகப்  பயன்படுத்தி பள்ளி வேனை ஓட்டிவந்ததாக  ராஜ்குமார்  தெரிவித்துள்ளார். மூன்று நாள்களாக, இந்த நிலையில்தான் ராஜ்குமார் பள்ளி வேனை இயக்கியுள்ளார். விஷயம் அறிந்த பள்ளி நிர்வாகமும், பெற்றோர்களும் அதிர்ச்சியடைந்தனர். 

கைதான ராம்குமார் மீது பாதுகாப்பற்ற முறையில் வாகனம் ஓட்டியது, மனித உயிர்களுக்குத் தீங்கு விளைவிக்க  முயன்றது ஆகிய இரு பிரிவுகளின் கீழ்  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தையடுத்து, மும்பையில் பள்ளி வேன்கள், பேருந்துகள் மீது கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

'நமக்கென்ன, யாரோ...' என்று சென்றுவிடாமல், பள்ளி வேன்குறித்து தகவல் அளித்தவருக்கு போலீஸ், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க