வெறும் 18 ஆயிரம் ரூபாயில் மகனின் திருமணம்! அசத்தப்போகும் ஐஏஎஸ் அதிகாரி | Just Rs.18,000 On Son's Wedding

வெளியிடப்பட்ட நேரம்: 20:25 (07/02/2019)

கடைசி தொடர்பு:20:25 (07/02/2019)

வெறும் 18 ஆயிரம் ரூபாயில் மகனின் திருமணம்! அசத்தப்போகும் ஐஏஎஸ் அதிகாரி

நம்முடைய சமூகத்தின் சடங்கு சம்பிரதாயங்களில், ஆடம்பரம் என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாக மாறி பல ஆண்டுகளாகிவிட்டன. குழந்தையின் முதலாம் ஆண்டு பிறந்த நாளுக்கே திருமண மண்டபம் பிடித்து, நிறைய அலங்காரங்கள் செய்து, நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு கறி விருந்து வைப்பதற்காகப் பல லட்சங்கள் செலவு செய்வது தற்போது இயல்பாகிவிட்டது. கல்யாணமென்றால் கேட்கவே வேண்டாம். பல லட்சங்களில் செலவுசெய்து திருமணம் நடத்துவது சகஜமாகிவிட்டது. 

திருமணம்

இப்படியான சமூகச் சூழலில், ஆந்திராவைச் சேர்ந்த ஐஏஎஸ் ஆபீசர் பட்னாலா பசந்த்குமார், தனது மகனின் திருமணத்தை, மதிய உணவையும் சேர்த்து, மொத்தம் 36,000 ரூபாய் செலவிலேயே நடத்த உள்ளார். வரும் பிரவரி 10-ம் தேதி நடைபெற உள்ள திருமணத்தில் ஆந்திர கவர்னரும் கலந்துகொள்ளவிருக்கிறார். இந்த 36,000 ரூபாய் செலவை, பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் ஆளுக்கு 18,000 ரூபாய் என்ற விகிதத்தில் பிரித்துக்கொள்வார்கள்.

பட்னாலா பசந்த்குமார், விசாகப்பட்டினம் மெட்ரோபாலிட்டன் மண்டல மேம்பாட்டு ஆணையத்தின் ஆணையராக இருக்கிறார். கடந்த    2012-ம் ஆண்டு ஐஏஎஸ் ஆக பதவி உயர்வுபெற்றவர். கடந்த 2017-ம் ஆண்டில், பசந்த்குமாரின் மகள் திருமணமும் இதேபோல சிக்கனமாகவும் சிறப்பாகவும் 16,100 ரூபாய் செலவில் நடந்துமுடிந்தது. தேவையற்ற ஆடம்பரத்தைத் தவிர்த்து, ஒரு திருமணத்தை எப்படி சிக்கனமாக நடத்துவதற்கு பட்னாலா பசந்த்குமார் ஒரு வாழும் உதாரணமாக இருக்கிறார் என்றால் மிகையாகாது.