மாரத்தான் ஓடி அக்காவின் திருமணத்தை நடத்திய தங்கை... புனே வீராங்கனைக்குக் குவியும் லைக்ஸ்! | 19-Year Old Athlete Poonam Sonune Who Ran A Marathon To Fund Sister’s Wedding

வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (08/02/2019)

கடைசி தொடர்பு:07:39 (08/02/2019)

மாரத்தான் ஓடி அக்காவின் திருமணத்தை நடத்திய தங்கை... புனே வீராங்கனைக்குக் குவியும் லைக்ஸ்!

தடகள வீராங்கனை ஒருவர் மாரத்தானில் ஓடி அதன்மூலம் நிதி சேகரித்து தன் சகோதரியின் திருமணத்துக்கு உதவியுள்ள நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

வீராங்கனை பூனம் சோனூன்

இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு இருக்கும் மதிப்பு, புகழ், பணம் மற்ற விளையாட்டுகளுக்குக் கிடைப்பதில்லை. முக்கியமாகத் தடகள வீரர்கள் இந்தியாவில் மதிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாள்களாக இருந்து வருகிறது. தடகள வீரர்கள் பலரும் போதுமான நிதி கிடைக்காமல் தங்கள் கனவுகளைத் துரத்த முடியாமல் கைவிட்டவர்கள் ஏராளம். இதை நாம் பலமுறை கண்டுள்ளோம். தடகள வீரர்கள் பலரும் வறுமையின் பிடியில் கல்வியைத் தொடர முடியாமல், தங்களின் கனவுகளை நிறைவேற்ற முடியாமல் இருக்கிறார்கள். ஏன் சிலருக்குத் திருமணம்கூட நடைபெறாமல் போயுள்ளது. 

வீராங்கனை பூனம் சோனூன்

Image Courtesy: storypick

இப்படியான நிலையில், வறுமையின் பிடியால் தன் சகோதரியின் திருமணம் முடங்கவிடாமல் சிறப்பாக நடத்த உதவியுள்ளார் புனேவைச் சேர்ந்த தடகள வீராங்கனை ஒருவர். பூனம் சோனூன் என்னும் இவருக்கு 19 வயது ஆகிறது. மகாராஷ்ட்ரா மாநிலம் புல்டானா மாவட்டத்தில் உள்ள சக்வான் கிராமத்தைச் சேர்ந்த இவரின் தந்தை ஒரு விவசாயக் கூலித் தொழிலாளி. தினமும் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் இவர்கள் குடும்பம் நடந்து வந்துள்ளது. இவ்வளவு வறுமையிலும் தனது கனவுகளைத் தேடிக்கொண்டிருக்கிறார் பூனம். அதற்குக் கிடைத்த பரிசாக 2018-ம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய ஜூனியர் தடகளத்தில் 3,000 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இவரது மூத்த சகோதரிக்கு சமீபத்தில் கல்யாண ஏற்பாடுகள் நடந்துள்ளன. 

வீராங்கனை பூனம் சோனூன்

Image Courtesy: tuljapurlive.com

ஏழ்மையான குடும்பம் என்பதால் கல்யாணத்துக்குப் போதுமான நிதி வசதி இல்லாமல் தவித்துள்ளனர். இந்நிலையில் தன் சகோதரி திருமணத்துக்குத் தேவையான பணம் திரட்டும் பொறுப்பை பூனம் ஏற்றுக்கொண்டார். அதன்படி, புனே மாரத்தான் போட்டியில் பங்கேற்க முடிவு செய்த அவர், அதற்காகப் பள்ளியின் அறிவுறுத்தலின்படி விஜேந்திர சிங் என்பவரிடம் பயிற்சிக்காகச் சேர்ந்துள்ளார். பயிற்சிக்குத் தேவையான பணத்தை அவரின் தந்தையால் சில நாள்களுக்கு மேல் கொடுக்க முடியாமல் போக, ஒரு தொண்டு நிறுவனத்தின் மூலம் பயிற்சியாளர் விஜேந்திர சிங்கே பூனத்துக்கு உதவியுள்ளார். 

அதன்படி புனே மாரத்தானில் கலந்துகொண்ட பூனம் சொல்லிவைத்தாற்போல் வெற்றிக்கனியைப் பறித்தார். புனே மாரத்தானில் முதலிடம் பிடித்து 1.25 லட்சம் பரிசாக பெற்றார். அந்தத் தொகையை சகோதரியின் திருமணத்துக்குக் கொடுத்துள்ளார். இவ்வளவு தூரம் கடினமாக உழைத்து உதவிய பூனத்தால் தன் சகோதரியின் திருமணத்தில் கலந்துகொள்ள முடியாமல் போயுள்ளது. ஆம், தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு வீரர்கள் தேர்வு நடந்து வருவதால் அதில் கலந்துகொண்டுள்ளார் பூனம். இதனால் அவரால் சகோதரியின் திருமணத்தில் கலந்துகொள்ள முடியவில்லை. இந்தச் செய்திகள் வெளியில் கசிய வீராங்கனை பூனத்துக்கு வாழ்த்துகள் குவிந்துவருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க