‘எதிர்க்கட்சியினர் ஜாமீனுக்காக ஓடுகின்றனர்!’- காங்கிரஸை விமர்சித்த மோடி | Most members of the congress are either out on bail says modi

வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (09/02/2019)

கடைசி தொடர்பு:12:10 (09/02/2019)

‘எதிர்க்கட்சியினர் ஜாமீனுக்காக ஓடுகின்றனர்!’- காங்கிரஸை விமர்சித்த மோடி

வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக அனைத்து எதிர்க்கட்சிகளும் மிகவும் விறுவிறுப்பாக தயாராகி வருகின்றன. பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களில் சூறாவளிப் பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார். நேற்று சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார் பிரதமர் மோடி. 

பொதுக்கூட்டம்

முதலில் சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், `விவசாயக் கடன் தள்ளுபடி என்று பொய்யான வாக்குறுதி அளித்து சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது காங்கிரஸ். கூட்டுறவு வங்கி மற்றும் கிராமப்புற வங்கிகளில் விவசாயக் கடன் வாங்கியவர்களின் கடன் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் தேசிய வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் கடன் வாங்கியவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை. இதை எப்படி முழுமையான விவசாயக் கடன் என்று கூற முடியும். 

மோடி

தேர்தல் நேரங்களில் எல்லாம் விவசாயக் கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதியை அளிப்பது காங்கிரஸின் வழக்கமாக உள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திலிருந்து சத்தீஸ்கர் அரசு விலகியுள்ளது. விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு பல சிறந்த திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6000 வழங்கப்படும் என அறிவித்ததோடு அதற்கான நிதியையும் உடனடியாக ஒதுக்கியுள்ளது. 

எதிர்க்கட்சியான காங்கிரஸும் அதை நடத்தும் குடும்பத்தினரும் பல்வேறு முறைகேடுகளில் சிக்கி ஜாமீனுக்காக ஓடிக்கொண்டிருக்கின்றனர் அல்லது ஜாமீன் பெற்று வெளியில் உள்ளனர். தங்கள் தரப்பு தவறுகளை அறிந்து சி.பி.ஐ உடனடியாக நடவடிக்கை எடுக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக சி.பி.ஐ மீது அவர்கள் தொடர்ந்து குற்றம் சுமத்துகின்றனர்’ எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.