மோடி முன்பே கறுப்புக்கொடி காட்டிய மாணவர்கள்!- அஸ்ஸாமில் பதற்றம் | PM modi face massive protest in assam

வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (09/02/2019)

கடைசி தொடர்பு:13:20 (09/02/2019)

மோடி முன்பே கறுப்புக்கொடி காட்டிய மாணவர்கள்!- அஸ்ஸாமில் பதற்றம்

இந்தியக் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது மத்திய அரசு. இதனால் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்க தேசத்திலிருந்து அஸ்ஸாமில் வந்து தஞ்சமடைந்தவர்கள் வெகுவாகப் பாதிக்கப்படுவார்கள். அவர்கள், பல வருடங்களுக்கும் மேலாக இங்கு இருந்தாலும், மத்திய அரசின் திட்டம் நிறைவேற்றப்பட்டால் பிற நாட்டு மக்கள் இந்தியாவை விட்டு வெளியேற்றப்படுவர்.

மோடி

இதனால், அந்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அஸ்ஸாம் மாநிலம் முழுவதும் பொதுமக்கள் மற்றும் மாணவர் அமைப்பினர் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகப் போராட்டம் நடத்திவருகின்றனர். பா.ஜ.க தலைவர்கள் கலந்துகொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கறுப்புக் கொடி காட்டி தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி வட கிழக்கு மாநிலங்களில் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் பிரதமர் மோடி. நேற்று காலை சத்தீஸ்கர், மாலை மேற்கு வங்கம் எனத் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தவர் நேற்று இரவு அஸ்ஸாம் மாநிலம் வந்தடைந்தார். இன்று அந்த மாநிலத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவுள்ளார். 

போராட்டம்

இதற்கிடையில் நேற்று அஸ்ஸாம் தலைநகர் கௌஹாத்தியிலிருந்து ராஜ்பவன் சென்ற பிரதமருக்கு, கௌஹாத்தி பல்கலைக்கழக வாயிலில் திரண்டிருந்த மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கறுப்புக் கொடி காட்டி `கோ பேக் மோடி’ ‘குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்’ என்ற முழக்கங்களையும் எழுப்பினர். பிரதமர் காரில் செல்லும் போது அவருக்கு மிக அருகில் சென்று கறுப்புக் கொடி காட்டிய புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடி தமிழகம் வந்த போது அவருக்கு எதிராக கோ பேக் மோடி என்ற ஹாஸ்டாக் ட்ரெண்ட் செய்யப்பட்டது. தற்போது அஸ்ஸாமிலும் அவருக்கு எதிராக ஹாஸ்டாக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.