‘இது பா.ஜ.கவின் திட்டமிட்ட சதியாகவே இருக்கும்’ - திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ சுட்டுக் கொலை | Trinamool Congress MLA Satyajit Biswas shot dead

வெளியிடப்பட்ட நேரம்: 09:05 (10/02/2019)

கடைசி தொடர்பு:09:05 (10/02/2019)

‘இது பா.ஜ.கவின் திட்டமிட்ட சதியாகவே இருக்கும்’ - திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ சுட்டுக் கொலை

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார். கடந்த சில நாள்களாக அரசியல் ரீதியாகத் தொடர்ந்து பரபரப்பாகவே உள்ளது மேற்கு வங்கம். அமித்ஷா கொல்கத்தா வருவதற்கு எதிர்ப்பு, மம்தா பானர்ஜியின் தர்ணா போராட்டம் போன்றவை நடந்த வண்ணம் உள்ளதால் அங்குத் தொடர் சர்ச்சை நிலவி வருகிறது. 

போராட்டங்கள் சற்று அமைதியடைந்த நிலையில் நேற்று மாலை மீண்டும் ஒரு பெரிய சர்ச்சை உருவாகியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்யஜித் பீஷ்வாஸ் என்பவர் கிரிஷன்காஞ்ச் தொகுதியின் எம்.எல்.ஏவாக உள்ளார். அவர் நேற்று மாலை நடியா மாவட்டத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ளார். அதே நிகழ்ச்சியில் அம்மாநில அமைச்சர் ரத்னா கோஷ், கௌரிசங்கர் தத்தா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நடியா மாவட்ட தலைவர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர். சரியாக மாலை 7:30 மணிக்கு எம்.எல்.ஏ பீஷ்வாஸ் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மேடையில் இருந்து கீழே இறங்கியுள்ளார் 

அப்போது அவருக்கு அருகில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் பீஷ்வாஸை நோக்கி துப்பாக்கியால் பலமுறை சுட்டுள்ளார். இதில் படுகாயமடைய எம்.எல்.ஏ அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தார். பிறகு உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், பீஷ்வாஸ் முன்னதாகவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்தக் கொலை சம்பவம் மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கொலை செய்தவர் உடனடியாக அந்த இடத்தை விட்டுத் தப்பி ஓடியுள்ளார். கொலை நடந்த இடத்தில் இருந்து நாட்டுத் துப்பாக்கி மட்டும் கிடைத்துள்ளதாகவும் இந்த விவகாரம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். 

சட்யஜித் பீஷ்வாஸின் கொலைக்கு பா.ஜ.கதான் காரணம் என அம்மாநில திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். இது பற்றி பேசிய அக்கட்சியின் செயலாளர் பார்த்தா சட்டர்ஜி, “ சட்யஜித் எங்களுடைய கட்சியை சேர்ந்தவர். மிகவும் நல்ல மனிதர். அவரை பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. கடந்த சில தினங்களாகவே பா.ஜ.க மாநிலத்தில் குழப்பம் ஏற்படுத்தி வருகிறது. தற்போது நடந்துள்ள கொலையும் பா.ஜ.க.வின் சதியாகவே இருக்கும். கவனமாகத் திட்டம் தீட்டி இதைச் செய்துள்ளனர்’ எனத் தெரிவித்துள்ளார்.