சாப்பாடு மீதம் வைத்தால் ரூ.50 அபராதம்! - அசத்தும் தெலங்கானா ஓட்டல் உரிமையாளர் | Pay Fine For Wasting Food In Telangana hotel

வெளியிடப்பட்ட நேரம்: 10:45 (10/02/2019)

கடைசி தொடர்பு:10:45 (10/02/2019)

சாப்பாடு மீதம் வைத்தால் ரூ.50 அபராதம்! - அசத்தும் தெலங்கானா ஓட்டல் உரிமையாளர்

நாடு முழுவதும் ஒரு நாளுக்கு நூற்றுக்கணக்கான டன் உணவு வீணாகக் குப்பையில் கொட்டப்படுகிறது. இது தொடர்பாக அரசு மற்றும் தன்னார்வலர் நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்தியும் உணவு வீணாவது குறைந்தபாடில்லை.

உணவு வீணாகக் கொட்டப்படுவதை தடுக்கும் நோக்கில் தெலங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியைச் சேர்ந்த ஒரு ஓட்டல் உரிமையாளர், தன் ஓட்டலில் சாப்பிட வருபவர்கள் உணவை மீதம் வைத்தால் அவர்களிடமிருந்து ரூ.50 அபராதமாக வசூலித்து வருகிறார். வாரங்கல் பகுதியில் கேதாரி  ‘ஹோட்டல்’ என்பது மிகவும் பிரபலமானது. இங்கு தினமும் பலர் வந்து உணவு உண்டு செல்கின்றனர்.

அப்படி உண்பவர்கள், பாதிக்கும் மேல் உணவை மீதம் வைத்தால் அவர்களிடமிருந்து கறாராக ரூ.50 பணத்தை வசூலித்து அதை குழந்தைகள் நல காப்பகத்துக்கு வழங்கி வருகிறார் உரிமையாளர் லிங்காலால் கேதாரி. உணவு வீணாவது தடுக்கப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு இதை கேதாரி செய்துவருகிறார். தன் ஓட்டலில் ஆங்காங்கே இந்த அறிவிப்புகள் வைத்தும் தொடர்ந்து உணவு மிச்சம் வைக்கப்படுவதாகவும் அவர் வேதனைத் தெரிவித்துள்ளார். 

இது பற்றி பேசிய அவர், ‘ என் ஹோட்டலுக்கு வரும் அனைவரும் நன்றாக சாப்பிட வேண்டும் என்பதுதான் என் எண்ணம். ஆனால் சிலர் சற்று ஓய்வெடுப்பதற்காகவே ஹோட்டலுக்கு வருகிறார்கள். அப்படி வருபவர்கள் உணவை மீதம் வைத்துவிட்டுச் செல்கின்றனர். உணவின் அவசியத்தை உணர்த்தவே நான் அபராதம் வசூலித்து வருகிறேன். முதலில் இதற்கு எதிர்ப்புகள் எழுந்தன பிறகு வாடிக்கையாளர்கள் என்னை புரிந்துகொண்டனர்’ எனத் தெரிவித்துள்ளார்.