இரண்டு ரயில்கள் முழுக்க தொண்டர்கள் - கறுப்பு சட்டையுடன் டெல்லியில் களமிறங்கிய சந்திரபாபு நாயுடு | Andhra Pradesh CM Chandrababu Naidu began a day-long hunger strike in New Delhi

வெளியிடப்பட்ட நேரம்: 10:30 (11/02/2019)

கடைசி தொடர்பு:10:30 (11/02/2019)

இரண்டு ரயில்கள் முழுக்க தொண்டர்கள் - கறுப்பு சட்டையுடன் டெல்லியில் களமிறங்கிய சந்திரபாபு நாயுடு

கடந்த 2014-ம் ஆண்டு ஆந்திராவில் இருந்து தெலங்கானா தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது. அப்போது, முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆந்திராவுக்குத் தனி சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தார். இந்தக் கோரிக்கை நான்கு வருடமாக தொடர்ந்துகொண்டிருந்தும் மத்திய அரசு தரப்பிலிருந்து இதுவரை முறையான பதில் வரவில்லை.

சந்திரபாபு நாயுடு

இதனால் மத்திய அரசு அநீதி இழைத்துவிட்டதாகக் கூறி தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது. அதன் பின் சிறப்பு அந்தஸ்து தொடர்பாக ஆந்திர மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கடை அடைப்பு போன்றவை நடத்தப்பட்டன. கூட்டணியிலிருந்து விலகிய பின்னர் சந்திரபாபு நாயுடு, தான் பங்கேற்கும் அனைத்துப் பொதுக்கூட்டங்களிலும் மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வந்தார்.

சந்திரபாபு நாயுடு

இதையடுத்து, கடந்த ஆண்டு நடைபெற்ற அனைத்து நாடாளுமன்றக் கூட்டத்திலும், சிறப்பு அந்தஸ்து தொடர்பாக ஆந்திர எம்.பி-க்கள் போராட்டம் நடத்தினர். சில நேரங்களில் அமளியில் ஈடுபட்டு நாடாளுமன்றத்தை முடக்கவும் செய்தனர். இருந்தும் மத்திய அரசு ஆந்திர அரசின் கோரிக்கையை சற்றும் கேட்கவில்லை.

தற்போது நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் அதே சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்தி,  டெல்லியில் உள்ள ஆந்திர பிரதேஷ் பவனில் 12 மணிநேரம் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் சந்திரபாபு நாயுடு. இதற்காக ஆந்திராவிலிருந்து இரண்டு ரயில்கள் மூலம் மக்களை திரட்டி டெல்லி அழைத்துச் சென்றுள்ளார். 

சந்திரபாபு நாயுடு

இன்று காலை டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்திய சந்திரபாபு நாயுடு அங்கிருந்து கறுப்புச் சட்டை அணிந்தவாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். இந்தப் போராட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் தொண்டர்கள் உட்பட பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சில அமைப்புகள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர். ஆந்திர அந்தஸ்து தொடர்பாக டெல்லியில் நடக்கும் இந்தத் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.