4 நாளில் பறிபோன 99 உயிர்கள்; உத்தரப்பிரதேசத்தைக் கலங்கடிக்கும் நாட்டுச் சாராயம் | In Uttar Pradesh 99 People Died By Using Illicit liquor

வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (11/02/2019)

கடைசி தொடர்பு:12:00 (11/02/2019)

4 நாளில் பறிபோன 99 உயிர்கள்; உத்தரப்பிரதேசத்தைக் கலங்கடிக்கும் நாட்டுச் சாராயம்

கடந்த நான்கு தினங்களில் 99 பேரின் உயிரைக் காவு வாங்கியிருக்கிறது நாட்டுச் சாராயம். உத்தரப்பிரதேசத்திலுள்ள சஹரான்பூர் கிராமம் உத்தரகாண்ட் எல்லையையொட்டியுள்ளது. இந்த கிராமத்திலும் உத்தரப்பிரதேசத்திலுள்ள இன்னும் சில கிராமங்களிலும் நாட்டுச் சாராயம் குடித்து 99  பேர் பலியாகியுள்ளனர். சஹரான்பூர் கிராமத்தில் திருமணம், மக்கள் அதிகம் சந்தித்துக் கொள்ளும் இடங்களில் விற்கப்பட்ட நாட்டுச் சாராயம் பலரின் உயிரைக் காவு வாங்கியுள்ளது.

சாராயம்

மிக மோசமான கச்சாப் பொருள்களைக் கொண்டு இவை தயாரிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கிறார்கள் அதிகாரிகள். 10 ரூபாய், 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட அந்தச் சாராயத்தைக் குடித்த சஹரான்பூரைச் சேர்ந்த 59 பேர், குஷிநகரைச் சேர்ந்த 10 பேர், ஹரித்வாரைச் சேர்ந்த 30 பேர் பலியாகியுள்ளனர். இது தொடர்பாக காவல்துறை வழக்குப் பதிவு செய்து 3049 பேரை கைது செய்துள்ளது. 79000 லிட்டர் நாட்டுச் சாராயத்தைப் பறிமுதல் செய்துள்ளது. சிறப்புப் படை அமைத்து உயிரிழப்பிற்கான காரணங்கள் குறித்து விசாரிக்க முடிவு செய்துள்ளது காவல்துறை.

இதற்கிடையே உயிரிழப்புகள் தொடர்பாக விசாரணை நடத்த ஐந்து பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நியமித்துள்ளார். மேலும் சாராயம் தயாரிக்கும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். இந்த உயிரிழப்புகள் அம்மாநிலத்தில் பதற்றத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.