இழந்த செல்வாக்கை மீட்கும் யுக்தி: உ.பி முதல்வர் வேட்பாளர் பிரியங்கா காந்தி? | Is Priyanka Gandhi the CM face for Congress in 2022 UP Assembly election? 

வெளியிடப்பட்ட நேரம்: 12:56 (11/02/2019)

கடைசி தொடர்பு:12:56 (11/02/2019)

இழந்த செல்வாக்கை மீட்கும் யுக்தி: உ.பி முதல்வர் வேட்பாளர் பிரியங்கா காந்தி?

கிழக்கு உத்தரப்பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி வத்ரா, அம்மாநிலத்தில் அடுத்து நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில், முதல்வர் வேட்பாளராகக் களமிறக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. 

பிரியங்கா காந்தி - ராகுல்

உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி பலவீனமாக இருக்கும் நிலையில், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலில் போட்டியிடலாம் என அக்கட்சி கருதியது. ஆனால், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் கூட்டணி அமைத்துக்கொண்டு, காங்கிரஸ் கட்சியைக் கழற்றிவிட்டுவிட்டனர். இதனால்,  காங்கிரஸ் கட்சிக்கு வலு சேர்க்கும் விதமாக தனது சகோதரி பிரியங்காவை தீவிர அரசியலுக்குக் கொண்டு வந்துள்ளார் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி. அவருக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் தொகுதி அமைந்துள்ள கிழக்கு உத்தரப்பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பிரியங்காவின் வருகை காங்கிரஸ் கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு காலத்தில் எவ்வாறு தொடர்ந்து ஆட்சி அதிகாரத்திலும் அரசியல் ரீதியாகவும் செல்வாக்குடன் திகழ்ந்ததோ, அந்த நிலைமையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என ராகுல் காந்தி விரும்புகிறார். 2017-ம் ஆண்டு நடைபெற்ற உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 403 தொகுதிகளில் வெறும் 7 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. 

எனவே, வரவிருக்கும் 2022-ம் ஆண்டு தேர்தலுக்குள் மாநிலத்தில் கட்சி இழந்த செல்வாக்கை மீட்டு, அந்தத் தேர்தலில் கூடிய வரைக்கும் ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்ய வேண்டும் என ராகுல் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக பிரியங்கா முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

இந்த நிலையில், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசத்தில் கள்ளச்சாராயத்துக்கு 70-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததற்கு அங்கு ஆட்சியில் உள்ள பா.ஜ.க. அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் எனக் காட்டமாக  பிரியங்கா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது, மேற்கூறிய நடவடிக்கையின் ஒரு பகுதியே என்றும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. 

பிரியங்கா ஆலோசனை

இதனிடையே சட்டசபை மற்றும் நாடாளுமன்றத் தொகுதி வாரியாகவும், மாவட்ட வாரியாகவும் காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்துப் பேசி வரும் பிரியங்கா, ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இணக்கமாக இருந்த பிரமாண வகுப்பினரையும் தங்கள் பக்கம் இழுக்கத் திட்டமிட்டுள்ளார்.  இதற்காக, பிரியங்கா விசுவாசிகள், தற்போது பா.ஜ.கவுக்கு ஆதரவாக உள்ள மற்றும் காங்கிரஸை மறந்துபோன பிராமணத் தலைவர்களையும் குடும்பத்தினரையும் தொடர்புகொண்டு பேசி வருவதாகவும், அவர்கள் பிரியங்காவைச் சந்தித்துப் பேசுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இவ்வாறு காங்கிரஸ் முகாம் சுறுசுறுப்படைந்துள்ளதால், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலிருந்தே உத்தரப்பிரதேச அரசியலில், போட்டிக் கடுமையாவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க