`பிரியங்கா காந்தியைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்!' - கணவர் வத்ரா உருக்கம் | 'Please keep her safe': Robert Vadra's emotional post for wife Priyanka Gandhi

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (11/02/2019)

கடைசி தொடர்பு:07:07 (12/02/2019)

`பிரியங்கா காந்தியைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்!' - கணவர் வத்ரா உருக்கம்

தீவிர அரசியலில் குதித்துள்ள பிரியங்கா காந்தியை இந்திய மக்களின் கரங்களில் ஒப்படைக்கிறேன் என அவரின் கணவர் ராபர்ட் வத்ரா உருக்கமாகக் கூறியுள்ளார். 

பிரியங்கா காந்தி உடன் ராபர்ட் வத்ரா

இதுவரை பிரியங்கா காந்தியைத் தீவிர அரசியலுக்கு அனுமதிக்காத அவரின் தாயார் சோனியா காந்தியும், கணவர் வத்ராவும் ராகுலின் விருப்பத்துக்கு இணங்க, அதற்குச் சம்மதித்துள்ளனர். அவரின் வருகை, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குப் பலம் சேர்க்கும் விதத்தில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தலில், மத்தியில் ஆட்சியமைப்பதைத் தீர்மானிக்கும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் கிழக்குப் பகுதியின் காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி வத்ரா, கட்சியினருடன் ஆலோசனை, தேர்தல் வியூகம் என ஏகத்துக்கும் சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், லண்டனில் சொத்து வாங்கியதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக பிரியங்காவின் கணவர் ராபர்ட் வத்ரா  மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இது தொடர்பாக, கடந்த வாரம் டெல்லி ஜாம் நகர் பகுதியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வந்த கணவர் வத்ராவை, பிரியங்காவே காரில் அழைத்து வந்து இறக்கிவிட்டுச் சென்றார்.  

இவ்வாறு தீவிர மன உறுதியுடன் அரசியல் களத்தில் இறங்கியுள்ள பிரியங்காவின் பாதுகாப்பு குறித்த அச்சம், அவரது குடும்பத்தினரிடம் தொடர்ந்து இருக்கத்தான் செய்கிறது. அதை உறுதிப்படுத்தும் விதத்தில், ராபர்ட் வத்ரா தனது ஃபேஸ்புக் தளத்தில், `` உத்தரப்பிரதேசத்தில் நீ தொடங்கியுள்ள புதிய பயணத்துக்கு எனது நல் வாழ்த்துகள் பிரியங்கா. நீ என்னுடைய மிகச் சிறந்த தோழி.  எனக்கு சிறந்த மனைவி; குழந்தைகளுக்குச் சிறந்த தாய்" என்று குறிப்பிட்டுள்ளார். 

பிரியங்கா

மேலும், ``தற்போது பிரியங்காவை இந்திய மக்களின் கரங்களில் ஒப்படைக்கும் நேரம் வந்துவிட்டது. இங்கே பழிவாங்கல் மற்றும் மோசமான அரசியல் சூழல் நிலவுகிறது. ஆனால், மக்களுக்குச் சேவை செய்வது அவரது கடமை என்பது எனக்குத் தெரியும். தயவு செய்து அவரைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்" என்றும் அதில் தெரிவித்துள்ளார் வத்ரா. பிரியங்காவுக்கும் ராபர்ட் வத்ராவுக்கும் கடந்த 1997-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க