`ஜெயலலிதாவின் திறமைகள்; ஆந்திராவின் நம்பிக்கை' - பவன் கல்யாண் கட்சியில் இணைந்தார் ராம மோகன ராவ்! | Tamilnadu Government ex Chief Secretary rama mohan rao joins pawan kalyan's Jana Sena Party

வெளியிடப்பட்ட நேரம்: 09:05 (12/02/2019)

கடைசி தொடர்பு:09:05 (12/02/2019)

`ஜெயலலிதாவின் திறமைகள்; ஆந்திராவின் நம்பிக்கை' - பவன் கல்யாண் கட்சியில் இணைந்தார் ராம மோகன ராவ்!

தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சிக்கு அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை பவன் கல்யாண் நேற்று ராம மோகன ராவ்விடம் அளித்தார். 

ராம மோகன ராவ்

ராம மோகன ராவ். இந்தப் பெயரை தமிழக மக்களும், அரசு அதிகாரிகளும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. ஜெயலலிதா ஆட்சி செய்த போது தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவ் அவரின் மறைவுக்குப் பிறகு பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானார். இவர் பதவியில் இருக்கும்போதே வருமானவரிச் சோதனையில் சிக்கினார். சேகர் ரெட்டி உள்ளிட்டவர்களுடன் இவருக்குத் தொடர்பு இருப்பதாகப் பேசப்பட்டது. 

ஜெயலலிதா

தலைமைச் செயலகத்தில் இருந்த இவரது அலுவலகத்தில் ரெய்டு நடந்தது. இது தமிழக வரலாற்றிலேயே அதுவரை நடக்காத கரும்புள்ளியாக அந்த ரெய்டு இருந்தது. இதனால் தலைமைச் செயலாளர் பதவியை இழந்தவர் மீண்டும் தொழில் முனைவோர் மேம்பாட்டுக் கழக இயக்குநராகப் பதவி பெற்றார். இதன்பிறகு ஓய்வு பெற்றவர் இப்போது அரசியலில் களமிறங்கியுள்ளார். 

பவன் கல்யாண்

அதுவும் தமிழகத்தில் அல்ல ஆந்திராவில். ஆம், ஆந்திராவில் நடிகர் சிரஞ்சீவி தம்பியும் நடிகருமான பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியில் தற்போது இணைந்துள்ளார் ராம மோகன ராவ். அவர் ஜன சேனா கட்சிக்கு அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். விஜயவாடாவில் நடந்த விழாவில் இதற்கான ஆணையை நடிகர் பவன் கல்யாண் நேற்று ராம மோகன ராவ்விடம் அளித்தார். இதுகுறித்து பேசியுள்ள ராவ், ``கட்சிக்கு ஆலோசகராக இருந்து வெற்றிக்கு வழிகாட்டுமாறு பவன் கல்யாண் கேட்டுக்கொண்டார். அவரின் கோரிக்கையை அடுத்து ஜன சேனா கட்சியில் இணைத்துள்ளேன். 

ராம மோகன ராவ் - பவன் கல்யாண்

ஒரு அரசியல்வாதியின் இதயம் மக்களுடன் எப்படி இருக்க வேண்டும் என்பதை ஜெயலலிதா எனக்குக் கற்றுக்கொடுத்துள்ளார். பவன் கல்யாணும் அப்படிதான் இருக்கிறார் என நினைக்கிறேன். பவன் ஒரு சினிமா நட்சத்திரம் என்றாலும், மக்களுக்கான ஒரு மனிதர். ஜெயலலிதாவிடம் இருந்த தகுதி, குணங்கள், திறமைகள் பவனிடம் இருப்பதைப் பார்க்கிறேன். ஒரு சினிமா நட்சத்திரமாக அரசியலுக்கு அவர் வந்தாலும், மக்களுடனே இருக்கிறார். மக்களின் கவலைகள் குறித்து சிந்திக்கிறார். ஜெயலலிதா மேடத்திடம் எப்படி பணியாற்றினேனோ அப்படி இனி பவனிடம் இருப்பேன். ஆந்திராவின் நம்பிக்கையாக பவன் இருக்கிறார்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

news credit: @thenewsminute

நீங்க எப்படி பீல் பண்றீங்க