`பக்தர்கள் வெள்ளத்தில் திருப்பதி!’- ஏழு வாகனங்களில் மலையப்பசுவாமி வீதியுலா | 'The devotees flood in Tirupati!' -Malaiyappa Swamy road in seven vehicles

வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (12/02/2019)

கடைசி தொடர்பு:14:20 (12/02/2019)

`பக்தர்கள் வெள்ளத்தில் திருப்பதி!’- ஏழு வாகனங்களில் மலையப்பசுவாமி வீதியுலா

திருப்பதி கோயிலில், ரதசப்தமி உற்சவமான இன்று ஏழு வாகனங்களில் மலையப்பசுவாமி மாடவீதிகளில் பவனிவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். லட்சக்கணக்கில் குவிந்துள்ள பக்தர்களின், ‘கோவிந்தா... கோவிந்தா’ என்கிற பக்தி முழக்கம் விண்ணதிரச் செய்கிறது.

திருப்பதி ஏழுமலையான் கோயில்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், ‘ரத சப்தமி’ என்ற சூரிய ஜயந்தி உற்சவம் இன்று தொடங்கி நடைபெற்றுவருகிறது. இன்று ஒரே நாளில் காலை முதல் இரவு வரை, அடுத்தடுத்து ஏழு வாகனங்களில் மலையப்ப சுவாமி எழுந்தருளி அருள்பாலித்துவருகிறார். இந்த ஒரு நாள் உற்சவ விழா, ‘மினி பிரம்மோற்சவம்’ என்றும் அழைக்கப்படுகிறது. தங்க வைர நகைகள், பட்டு வஸ்திரங்களால் அலங்கரிக்கப்பட்ட சூரிய பிரபை வாகனத்தில் இன்று காலை 5.30 மணிக்குக் கோயிலின் பிரதான நுழைவு வாயில் வழியாக உற்சவர் ஏழுமலையான் எழுந்தருளினார். சூரிய கதிர்கள் மலையப்பசுவாமி மீது பட்டவுடன், வேத பண்டிதர்கள் சிறப்பு பூஜைகளைச் செய்தனர். பின்னர், மேற்கு மாட வீதியில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்களுக்கு மத்தியில் ஏழுமலையான் பவனிவந்து அருள்பாலித்தார். பக்தர்கள், ‘கோவிந்தா... கோவிந்தா’ என்று விண்ணை அதிரச் செய்யும் அளவுக்குப் பக்தி முழக்கமிட்டனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயில்

சூரிய பிரபை வாகன சேவையைத் தொடர்ந்து, 9 மணிக்குச் சிறிய சேஷ வாகனத்திலும், 11 மணிக்குக் கருட வாகனத்திலும், மதியம் ஒரு மணிக்கு அனுமந்த வாகனத்திலும் ஏழுமலையான் வீதியுலா வந்தார். வாகன சேவைகள் முன்பு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மதியம் 2 மணிக்குச் சக்கர ஸ்நானம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, மாலை 4 மணிக்குக் கற்பக விருட்ச வாகனம், 6 மணிக்குச் சர்வ பூபால வாகனம், இரவு 8 மணிக்குச் சந்திர பிரபை வாகனங்களில் ஏழுமலையான் எழுந்தருளி வீதியுலா வருவதோடு, ரதசப்தமி உற்சவம் நிறைவு பெறுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோயில்

பக்தர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை, தேவஸ்தான நிர்வாகம் விரிவான முறையில் செய்துள்ளது. மாட வீதிகளில் உள்ள கேலரிகளில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாட வீதிகளில் நடக்கும்போது, தரை சுடாமல் இருப்பதற்காக ‘கூல் பெயிண்ட்’ அடிக்கப்பட்டுள்ளன. ரதசப்தமியை முன்னிட்டு, கட்டண சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.