`நான் லோகேஷின் அப்பா; உங்களின் அடையாளம் என்ன?' - மோடியை விளாசிய சந்திரபாபு நாயுடு | Andhra pradesh CM chandrababu naidu criticize PM modi on delhi hunger strike

வெளியிடப்பட்ட நேரம்: 14:14 (12/02/2019)

கடைசி தொடர்பு:19:21 (12/02/2019)

`நான் லோகேஷின் அப்பா; உங்களின் அடையாளம் என்ன?' - மோடியை விளாசிய சந்திரபாபு நாயுடு

ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் நிறுத்தி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று டெல்லியில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார். காலை 8 முதல் இரவு 8 மணி எனச் சுமார் 12 மணி நேரம் தொடர்ச்சியாக இந்தப் போராட்டம் நடைபெற்றது. 

சந்திரபாபு நாயுடு

இந்த நிகழ்வின் போது என்.டி.டி.விக்கு ஆந்திர முதல்வர் அளித்த பேட்டியில், ``எனக்கும் மோடிக்கும் தனிப்பட்ட முறையில் எந்தப் பகையும் கிடையாது. இது ஆந்திர மக்களுக்கும் மோடிக்கும் இடையேயான யுத்தம். அதேபோல் மேற்கு வங்கத்தில் நடக்கும் போராட்டம் மம்தா பானர்ஜிக்கும் மோடிக்குமானது இல்லை. அது மேற்கு வங்க மக்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நடக்கும் சண்டை. அதே நிலை தமிழகத்திலும் உள்ளது. இவை அனைத்தும் ஏன் நடக்கின்றன? ஏனெனில் பிரதமர் மோடி நாட்டைப் பிளவு படுத்திவிட்டார். மக்களின் உணர்வுகளை மதிக்காமல் அவமானப்படுத்துகிறார். அவர்களுக்கு அநீதி விளைவிக்கிறார். மாநிலத் தலைமையை மதிக்காமல் உதாசினப்படுத்துகிறார். இது பா.ஜ.க ஆட்சியில் இல்லாத அனைத்து மாநிலங்களிலும் நடைபெறுகிறது. 

சந்திரபாபு நாயுடு

இதற்கு எல்லாம் ஒரு படி மேலே சென்று மோடி என் குடும்பத்தையும் சொந்த விஷயங்களையும் விமர்சிக்கிறார். 1999-ம் ஆண்டு நான் ஆந்திராவின் முதல்வராகப் பதவியேற்றேன். ஆனால் மோடி 2002-ம் ஆண்டுதான் குஜராத்தின் முதல்வரானார். நான் கடந்த 40 வருடங்களாக அரசியலில் உள்ளேன். என் வாழ்நாளில் பல தேசியத் தலைவர்கள், சர்வதேசத் தலைவர்கள், பல பிரதமர்களை சந்தித்துள்ளேன். முன்னதாக நம் நாட்டில் இருந்த பல பிரதமர்களுடன் வாக்குவாதம் செய்துள்ளேன், பல பிரதமர்களை தேர்ந்தெடுப்பதில் ஓர் அங்கமாக இருந்துள்ளேன். மேலும் அப்துல் கலாமைக் குடியரசு தலைவராக நியமனம் செய்ய வாஜ்பாயுடன் மோதலில் ஈடுபட்டுள்ளேன். இவை அனைத்தும் நாட்டுக்காகவும் என் மக்களுக்காகவும் மட்டுமே செய்துள்ளேன்.

சந்திரபாபு நாயுடு

ஆனால், நீங்கள் என் மகனுக்காகச் செய்ததாகக் கூறுகிறீர்கள். நான் முதன் முதலில் முதல்வரானபோது என் மகன் 7-ம் வகுப்பு படித்தார். நான் லோகேஷின் தந்தை எனப் பெருமையாகக் கூறுவேன், புவனேஷ்வரியின் கணவர் என்றும் தேவேஷின் தாத்தா என்று கூறுவதிலும் எனக்கு கர்வமாக உள்ளது. இப்போது உங்களை ஒன்று கேட்கிறேன். நீங்கள் யார். உங்களுடைய அடையாளம் என்ன? முத்தலாக் பற்றிக் கருத்து கூறும் மோடி, நீங்கள் விவாகரத்து செய்யாமலே உங்கள் மனைவியைப் பிரிந்து வாழ்கிறீர்கள். அதன் பெயர் என்ன?

 

 

தற்போது கூறும் இந்தக் கருத்துகள் அனைத்தும் என் தனிப்பட்ட கருத்துகள் மட்டுமே. யாரேனும் நம்மைப் பற்றி எல்லை மீறிப் பேசினால் அவர்களுக்கு அந்த வழியிலேயே பதில் அளிக்கவேண்டும் அதைத்தான் நான் செய்கிறேன். நான் என்.டி.ஆரின் மருமகன். அவருக்கு வழங்க வேண்டிய அனைத்து மரியாதைகளையும் முறையாக வழங்கி வருகிறேன். அவரின் ஆசீர்வாதத்துடனே இந்தக் கட்சியை வழிநடத்தி வருகிறேன். ஆனால் உங்களின் அரசியல் குரு அத்வானிக்கு நீங்கள் என்ன மரியாதை வழங்குகிறீர்கள். குஜராத், கோத்ரா விவகாரத்திலிருந்து அத்வானி உங்களைப் பாதுகாத்தார். ஆனால் தற்போது நீங்கள் அவருக்கு என்ன செய்கிறீர்கள்?

சந்திரபாபு நாயுடு

கடந்த ஞாயிற்றுக்கிழமை வானில் பறந்து ஆந்திராவுக்கு வந்து என்னை விமர்சித்தார் மோடி. அன்று நடந்த பொதுக்கூட்டம் யார் பணத்தில் நடந்தது. மோடியின் சொந்தப் பணத்திலா? இல்லவே இல்லை அது மக்களின் பணம். கட்சிக்கு மக்கள் வழங்கிய பணம். இப்படியிருக்க அவர் என்னைக் குறைகூறுகிறார். இன்று நடக்கும் உண்ணாவிரதப் போராட்டம் ஆந்திர அரசின் பணத்தில்தான் நடத்தப்படுகிறது. இது மக்களுக்காக மக்கள் நடத்தும் போராட்டம். ஆந்திர அரசு, இந்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்துகிறது. என் மக்களின் சுதந்திரத்துக்காகவே இது நடத்தப்படுகிறதே தவிர ஒரு தனிப்பட்ட கட்சியின் போராட்டம் இல்லை” எனப் பேசியுள்ளார்.

News Credits : NDTV