வெளிநாடுவாழ் இந்தியர்களின் பங்குகளை உறவினர்களுக்குக் கைமாற்றிவிட செபி ஒப்புதல்! | NRIs, foreign nationals can now transfer equity shares

வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (12/02/2019)

கடைசி தொடர்பு:15:05 (12/02/2019)

வெளிநாடுவாழ் இந்தியர்களின் பங்குகளை உறவினர்களுக்குக் கைமாற்றிவிட செபி ஒப்புதல்!

பங்குச்சந்தைகளைக் கண்காணித்துவரும் செபி அமைப்பானது, வெளிநாடுவாழ் இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர் மற்றும் வெளிநாட்டுக் குடியுரிமை பெறாமல் தற்காலிகமாக அங்கே வசித்துவரும் இந்தியர்களுக்கு, தங்களது பங்குச்சந்தை முதலீடுகளை நெருங்கிய உறவினர்களுக்கு கைமாற்றுவதற்கு சில நிபந்தனைகளுடன் ஒப்புதல் தந்துள்ளது. நெருங்கிய உறவினர்கள் எனப்படும் வட்டத்தில், கணவன், மனைவி, அம்மா, அப்பா, சகோதர சகோதரிகள், மகன் மற்றும் மகள் ஆகிய உறவுகள் அடங்குவார்கள்.

பங்குகளைக் கைமாற்ற விரும்புபவர், அவரது பான் கார்டு நகலை தொடர்புடைய பங்குகளின் நிறுவனங்களிடம் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். ஆனால், வெளிநாடுவாழ் இந்தியர்களில் பலருக்கு பான் கார்டுகள் இல்லாததால் அதன் நகலைச் சமர்ப்பிப்பது சிக்கலாகக்கூடும். எனவே, இந்த விதிமுறையைத் தளர்த்தி, பங்குகளை இடமாற்ற விரும்பும் வெளிநாடுவாழ் இந்தியர்கள், பான் கார்டு விவரங்களைச் சமர்ப்பிக்கத் தேவையில்லை என்று கூறியுள்ளது.

செபியின் விதிமுறைப்படி, பங்குகள் இடமாற்றமானது, 2016 ஜனவரி ஒன்றாம் தேதிக்குப் பிறகு விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும். மேலும், வியாபார நோக்கம் இல்லாமல், அன்பளிப்பு வகையிலான இடமாற்றத்துக்கு மட்டுமே பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. பங்குகளை கைமாற்ற விரும்புபவர்கள், வெளிநாட்டில் தங்களது குடியுரிமை நிலை குறித்த சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டுமென்றும் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதுகுறித்து பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸிடம் கேட்டபோது, ``வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள், தங்களது பங்குகளை நிர்வகிக்க முடியாத சூழலில் நெருங்கிய உறவினர்களுக்குக் கைமாற்றிவிட இந்த விதிமுறை மாற்றம் பயனுள்ளதாக இருக்கும். அவர்களில் பலருக்கு பான் கார்டுகளைச் சமர்ப்பிப்பதில் சிக்கல்கள் இருக்கலாம். தற்போது அதில் சலுகை கொடுக்கப்பட்டுள்ளதால் எளிதில் பங்குகளைக் கைமாற்றமுடியும். இது அவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. மற்றபடி, பங்குச்சந்தையில் இது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது" என்றார்.