`மன்னிப்புக் கிடையாது; அப்படியே மூலையில் அமருங்கள்!’ - சி.பி.ஐ இயக்குநருக்கு நூதன தண்டனை | CBI’s Nageswara Rao fined for SC contempt

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (12/02/2019)

கடைசி தொடர்பு:16:20 (12/02/2019)

`மன்னிப்புக் கிடையாது; அப்படியே மூலையில் அமருங்கள்!’ - சி.பி.ஐ இயக்குநருக்கு நூதன தண்டனை

பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் உள்ள அரசுப் பெண்கள் காப்பகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை முழுவதும் உச்ச நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் நடக்கிறது. இதற்கிடையில் பாலியல் வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்த ஏ.கே.சர்மா திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார்.

உச்சநீதிமன்றம்

நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் நடக்கும் இந்த விசாரணையில் நீதிமன்ற அனுமதி பெறாமல் விசாரணை அதிகாரி மாற்றம் செய்யப்பட்டதுக்கு பல கண்டனங்கள் எழுந்தன. இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் சி.பி.ஐ இடைக்கால இயக்குநராக இருந்த நாகேஷ்வர ராவ் நேரில் ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டார்.

இந்த வழக்கு இன்று காலை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ இடைக்கால இயக்குநர் நாகேந்திர ராவும் ஆஜரானார். பிறகு, நடந்த விசாரணையில் நாகேஷ்வர ராவின் செயலுக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார். பின்னர், மத்திய அரசு சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணு கோபால், ‘நாகேஷ்வர ராவ் மற்றும் சி.பி.ஐ சட்ட ஆலோசகர் பசுரன் ஆகிய இருவரின் மன்னிப்பை நீதிமன்றம் ஏற்க வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்தார்.

சிபிஐ  நாகேஷ்வர ராவ்

மன்னிப்பை ஏற்க மறுத்த நீதிபதி இந்த வழக்கில் ஏ.கே சர்மாவை மீண்டும் விசாரணை அதிகாரியாக நியமித்து, நாகேஷ்வரராவுக்கு ஒரு லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். பின்னர் சி.பி.ஐ இயக்குநரையும் சி.பி.ஐ சட்ட ஆலோசகரையும், ‘இன்று நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் முடியும் வரை இருவரும் அந்த மூலையில் சென்று அமருங்கள்’ என்றும் உத்தரவிட்டார். 

 ‘நான் என் தவற்றை முழுவதுமாக உணர்ந்துவிட்டேன். அதற்காக நீதிமன்றத்திடம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். நீதிமன்றத்தின் உத்தரவுகளை நான் தெரிந்து மீறவில்லை. சிறு தவறு நடந்துவிட்டது. நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறவேண்டும் என நான் கனவிலும் நினைத்தது இல்லை’ எனக் கடந்த வாரம் நாகேஷ்வர ராவ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.