இனி மளிகைப் பொருள்களும் டெலிவரி! - ஸ்விக்கியின் புதிய சேவை தொடக்கம் | Not just food delivery, Swiggy is now meeting your everyday needs too

வெளியிடப்பட்ட நேரம்: 17:35 (12/02/2019)

கடைசி தொடர்பு:12:04 (15/02/2019)

இனி மளிகைப் பொருள்களும் டெலிவரி! - ஸ்விக்கியின் புதிய சேவை தொடக்கம்

ன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி, இனிமேல் காய்கறி, பழங்கள் உள்ளிட்ட மக்களின் அன்றாடத் தேவைக்கான  பொருள்களையும் சப்ளை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. 

ஸ்விக்கி

ஆன்லைன் உணவு டெலிவரி சேவை தொழிலில் நாளுக்கு நாள் போட்டி அதிகரித்து வருவதால், தொழிலைத் தக்கவைத்துக் கொள்ளும் நீண்டகால உத்தியாக ஸ்விக்கி இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. `ஸ்விக்கி ஸ்டோர்ஸ்' என்ற பெயரில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தொடங்கப்பட்டுள்ள இந்த ஆன்லைன் ஆப் மூலம் மக்களுக்கு, உணவுப் பொருள்கள் மட்டுமல்லாது பல்வேறு நுகர்வோர் பொருள்களும் சப்ளை செய்யப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. 

பழங்கள், காய்கறிகள், மளிகைக் கடை மற்றும் சூப்பர் மார்க்கெட் பொருள்கள், பூக்கள், குழந்தைகளுக்குத் தேவையான பால்பவுடர் உள்ளிட்ட பொருள்கள், மருந்துகள் உட்பட பல வகையான பொருள்களும் சப்ளை செய்யப்படும் என ஸ்விக்கியின் சி.இ.ஓ ஸ்ரீஹர்ஷா மெஜெட்டி தெரிவித்துள்ளார். 'ஸ்விக்கி ஸ்டோர்ஸ்' ஆப் மூலம், வாடிக்கையாளர்கள் தாங்கள் வசிக்கும் நகரில் உள்ள அனைத்துக் கடைகளில் உள்ள பொருள்கள் குறித்த விவரங்களைப் பார்வையிட்டு, தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்க முடியும். 

``நுகர்வோர், உணவு டெலிவரியின்போது அனுபவிக்கும் அதே மகிழ்ச்சியான உணர்வை, தங்களுக்குத் தேவையான அன்றாட பொருள்களை வாங்கும்போதும் அனுபவிக்க முடியும். நகர்ப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் மேம்படுத்தும் வகையிலான சேவையை அளிக்கும் எங்களது நீண்டகாலத் திட்டத்தின் முதல் மைல் கல்லாக இந்த 'ஸ்விக்கி ஸ்டோர்ஸ்' சேவை அமைந்துள்ளது. 

இதற்காக ஒவ்வொரு நகர்ப்புற பகுதிகளிலும் உள்ள முன்னணி மளிகைக் கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகள், மருந்துக் கடைகள் உள்ளிட்டவை குறித்த விவரங்களை, வாடிக்கையாளர்களுக்கு ஸ்விக்கி ஸ்டோர்ஸ் அளிக்கும்’’ என ஸ்ரீஹர்ஷா மேலும் தெரிவித்துள்ளார். 

2014-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்விக்கி, நாடு முழுவதும் சுமார் 80-க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள 60,000-க்கும் மேற்பட்ட உணவு விடுதிகளைத் தனது பார்ட்டனராகக் கொண்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க