நிர்மலா தேவி விவகாரம் - கருப்பசாமி, முருகனுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்! | nirmala devi issue - murugan, karuppasami got bail

வெளியிடப்பட்ட நேரம்: 17:08 (12/02/2019)

கடைசி தொடர்பு:17:08 (12/02/2019)

நிர்மலா தேவி விவகாரம் - கருப்பசாமி, முருகனுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்!

மாணவிகளைத் தவறாக வழிநடத்திய விவகாரத்தில் அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். அவருடன் கைது செய்யபட்ட கருப்பசாமி, முருகன் ஆகிய இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். 

கருப்பசாமி முருகன்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த ஆடியோ பதிவில் மாணவிகளை அவர் தவறாக வழிநடத்தியது அம்பலமானது. மதுரை காமராஜர் பல்கலைகழக நிர்வாகிகள் சிலரின் தூண்டுதலின் பேரில் மாணவிகளைத் தவறான பாதைக்கு வழிநடத்தியது தெரியவந்தது. இதையடுத்து நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிபிசிஐடி போலீஸார் நடத்திய சோதனையில் நிர்மலா தேவி வீட்டிலிருந்த செல்போன், டைரி, கம்ப்யூட்டர் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கிடையே நிர்மலா தேவி விவகாரத்தில் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, உதவிப் பேராசிரியர் முருகன் உள்ளிட்டோர் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

நிர்மலா தேவி

இருவரும் தங்களுக்கு ஜாமீன் கோரி, விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி முத்து சாரதா, இருவரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஜாமீன் மனு தள்ளுபடி தொடர்பாக முருகனின் மனைவி சுஜாதா பேசுகையில், ``மாவட்ட நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் ஜாமீன் கேட்டு மனு அளித்து மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. அதைத் தொடர்ந்து நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு வழக்கைப் பதிந்தோம். ஜனவரி 8-ம் தேதி கேஸ் ட்ரெயல் வருகிறது, 24-ம் தேதி வருகிறது, பிப்ரவரிதான் வருகிறது என்று கூறி தொடர்ந்து எங்கள் மனுவைத் தவிர்த்து வருகின்றனர். ஆனால், இதுவரை டிரெயலுக்குகூட எங்கள் மனு உச்ச நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. என் கணவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று திட்டவட்டமாக உள்ளனர்' என்று பேசியிருந்தார். இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.