``சொர்க்கம் என்ன தரையில் இறங்குமா?’’ - உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கேள்வி! | "Would the heavens have fallen if the leave of the apex court had been sought first?"- Asks CJI

வெளியிடப்பட்ட நேரம்: 19:03 (12/02/2019)

கடைசி தொடர்பு:19:20 (12/02/2019)

``சொர்க்கம் என்ன தரையில் இறங்குமா?’’ - உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கேள்வி!

``அபராதத்தோடு சேர்த்து, அவருக்கு சிறைத்தண்டனையும் வழங்கினால், நீங்கள் அதை எதிர்ப்பீர்களா?’’ என வழக்கறிஞர் கேகே வேணுகோபாலிடம் கேட்டார் தலைமை நீதிபதி.

``சொர்க்கம் என்ன தரையில் இறங்குமா?’’ - உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கேள்வி!

ச்ச நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கில் சி.பி.ஐ முன்னாள் இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவுக்கு உச்ச நீதிமன்றம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பியுள்ளனர். 

சி.பி.ஐ இயக்குநர் மற்றும் சிறப்பு இயக்குநர் இடையே கடந்த அக்டோபர் மாதம் மோதல் முற்றிய நிலையில் இருவருக்கும் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டு, புதிய இடைக்கால இயக்குநராகச் சென்னை ஐ.ஐ.டி முன்னாள் மாணவரும் சி.பி.ஐ இணை இயக்குநராக இருந்தவருமான நாகேஸ்வர ராவை மத்திய அரசு நியமித்தது.

உச்ச நீதிமன்ற

இவர் சில தினங்களுக்கு முன்னர், இணை இயக்குநர் ஏ.கே.சர்மாவை மத்திய ரிசர்வ் காவல் படைக்கு பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டார். பீகார் மாநிலம் முசாபர்பூர் வழக்கில், அந்த மாநிலத்தில் உள்ள 16 காப்பகங்களில் சிறுமிகள் வன்கொடுமை செய்யப்பட்ட புகார் தொடர்பாக, இணை இயக்குநர் ஏ.கே.சர்மா தலைமையிலான குழு விசாரித்து வந்தது.

உச்ச நீதிமன்ற'இந்தப் புகாரில் பல முக்கியப் பிரமுகர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக வெளியான தகவல்களை அடுத்து, விசாரணை தடையின்றி நடக்க, இந்த வழக்கை விசாரித்த ஏ.கே.சர்மாவை பணியிட மாற்றம் செய்யக் கூடாது' என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஒருவேளை இந்த அதிகாரியை பணியிடமாற்றம் செய்வதானால் அதற்கு நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. எனினும் உச்ச நீதிமன்றத்தின் நேரடி உத்தரவையும் மீறி, கடந்த ஜனவரி 17-ம் தேதி இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவ், சிஆர்பிஎஃப்-க்கு சர்மாவை இட மாற்றம் செய்தார். 

இந்தப் பணியிட மாற்றத்தை எதிர்த்து, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள், சி.பி.ஐ இடைக்கால இயக்குநர் மீது கடும் கோபத்தை வெளிப்படுத்தியிருந்த நிலையில், 'இது தெரியாமல் நடந்த நிகழ்வு' என நாகேஸ்வர ராவ் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கடிதம் அளித்திருந்தார்.

இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், நாகேஸ்வர ராவுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர். இந்தத் தொகையை ஒரு வாரத்துக்குள் அவர் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மேலும், இன்றைய நீதிமன்ற பணிநேரம் முடியும்வரை அவர், நீதிமன்றத்திலேயே ஓரமாக அமர்ந்திருக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.

உச்ச நீதிமன்ற

இந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள், நாகேஸ்வர ராவ் சார்பில் வாதாடிய மத்திய அரசின் வழக்கறிஞர் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் மற்றும் நாகேஸ்வர ராவிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். 

முன்னதாக வாதாடிய கே.கே.வேணுகோபால், நாகேஸ்வர ராவ் தெரியாமல் தவறிழைத்துவிட்டார் எனவும், அதற்காக அவர் மன்னிப்புக் கடிதம் வழங்கியுள்ளதாகவும், அவரது கறைபடியாத 30 ஆண்டுகளுக்கும் மேலான பணியை மனதில் கொண்டு, அவரை மன்னிக்க வேண்டும் எனவும், குறிப்பாக, நீதிமன்ற உத்தரவுகள் ஏதேனும் உள்ளனவா என ஒரு பணியிட மாற்றத்துக்கு முன்னர் சரிபார்க்க வேண்டியது, அந்தத் துறையின், இளநிலை வழக்கறிஞர்களின் பணி என்றும் குறிப்பிட்டார். 

இதைத் தொடர்ந்து, கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், ``முதலில் நீதிமன்றத்தை அவமதித்த ஒருவருக்காக, அரசு வழக்கறிஞர் ஏன் வாதாடுகிறார்? அரசு இதற்கு ஏன் செலவிடுகிறது?’’ என்று கேள்வி எழுப்பினார். ``நீதிமன்ற உத்தரவில், அந்த அதிகாரியை பணியிடமாற்றம் செய்வதாக இருந்தால், ஆணைப் பத்திரம் தாக்கல் செய்து அனுமதி பெற வேண்டும் என மிகத் தெளிவாக இருக்கிறது, இந்த உத்தரவைப் பற்றி நாகேஸ்வர ராவ் அறிந்திருந்தார் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. இருப்பினும் அவர் அதை மதிக்காமல் இருந்ததை எங்களால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. இதுவே நீதிமன்ற அவமதிப்பு இல்லை எனில், வேறு எதை நீதிமன்ற அவமதிப்பாகக் கொள்வது? பணியிட மாற்றத்துக்கு முன்னதாக நீதிமன்றத்தை அணுகியிருந்தால் 'சொர்க்கம் என்ன தரையில் இறங்கியிருக்குமா', அவ்வளவு அவசரம் ஏன்?’’ என்று அடுக்கடுக்காகக் கேள்விகளை எழுப்பினார்.

உச்ச நீதிமன்ற

``தவறிழைப்பது மனித குணம், மன்னிப்பது கடவுள் குணம்’’ என மேற்கோள் காட்டிய வழக்கறிஞர் வேணுகோபால், நீதிமன்றம் நாகேஸ்வர ராவுக்கு மன்னிப்பு வழங்காமல் தண்டித்தால் அவரது வாழ்க்கை, பணி ஆகியவை பாதிப்படையும் எனக் கோரினார். ``அவருடைய பெயருக்கு ஏற்கெனவே களங்கம் ஏற்பட்டுவிட்டது’’ எனக் காட்டமாகப் பதிலளித்தார் தலைமை நீதிபதி. ``இவருக்கு மன்னிப்பு வழங்கினால் நீதிமன்றத்தின் மரியாதையை நிலைநிறுத்திக்கொள்ள முடியாது’’ என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து ``அபராதத்தோடு சேர்த்து, அவருக்குச் சிறைத்தண்டனையும் வழங்கினால், நீங்கள் அதை எதிர்ப்பீர்களா?’’ என வழக்கறிஞர் வேணுகோபாலிடம் கேட்டார் தலைமை நீதிபதி, அதற்கு வழக்கறிஞர், அபராதம் மட்டும் விதிக்குமாறு கேட்டுக்கொண்டார்.  
பின்னர் நாகேஸ்வர ராவிடம், ``இந்த நீதிமன்றம் உங்களுக்கு 30 நாள் சிறைத்தண்டனை வழங்க நினைக்கிறது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?’’ எனக் கேட்டார். அப்போது நாகேஸ்வர ராவ், தன் இரு கரங்களையும் கூப்பி, பகிரங்கமாக நீதிமன்றத்தின் முன் மன்னிப்புக் கோரினார்.

இதைத்தொடர்ந்து நீதிமன்றம் அவரை அபராதத்தோடு விடுவித்தது. 


டிரெண்டிங் @ விகடன்